சென்னை: ‘மத்திய பட்ஜெட்டில் பாரபட்சம் காட்டப்பட்டு உள்ளதாகவும், தமிழ்நாடு புறக்கணிப்பு செய்யப்பட்டுள்ளதை கண்டித்து, திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில், தமிழ்நாடு முழுவதும் வரும் 12ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
மத்தியஅரசை கண்டித்து, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி 12.02.2026 அன்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை புறக்கணித்து, தமிழ்நாட்டு மக்களை வஞ்சித்து வளர்ச்சியைத் தடுத்து வரும் ஒன்றிய பாஜக அரசையும் – அதற்கு ஒத்து ஊதும் அடிமை அதிமுக வையும் கண்டித்து – தமிழ்நாட்டின் அனைத்து மாநகரங்களில் தலா ஒரு இடத்திலும் மற்றும் கழக ஒன்றியம், நகரம், பேரூர் அளவிலும் 12.02.2026 வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும். தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! என கூறப்பட்டு உள்ளது.
இது குறித்து திமுக தலைமையிலான தச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய பாஜக அரசு தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டிற்குத் தரப்பட வேண்டிய கல்வி நிதி ரூ.3,458 கோடி, நூறு நாள் வேலைத் திட்ட நிதி ரூ.2,000 கோடி மற்றும் குடிநீர் இணைப்புத் திட்ட நிதி ரூ.3,112 கோடி என எதையுமே விடுவிக்காமல் ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கு ஒரு பைசா கூட ஒதுக்காமல் வஞ்சிக்கும் பாஜக அரசை ஆதரித்து, தமிழக உரிமைகளை அதிமுக அடகு வைத்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் சாடப்பட்டுள்ளது.
குறிப்பாக, கிராமப்புற ஏழை மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தைச் சிதைக்கும் வகையிலான சட்டங்களைக் கொண்டு வந்துள்ள ஒன்றிய அரசு, மறுபுறம் அமெரிக்காவுடன் மேற்கொண்டுள்ள வர்த்தக ஒப்பந்தம் மூலம் அந்நாட்டு விவசாயப் பொருட்களை இங்கே இறக்குமதி செய்ய வழிவகை செய்துள்ளது.
இது தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கும் செயல் என்றும், நூறு நாள் வேலை ஒழிப்பு மற்றும் விவசாயத்தை அழிக்கும் ஒப்பந்தம் என ஒரே நேரத்தில் கிராமப்புற மக்கள் மீது பாஜக அரசு இரட்டை அணுகுண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளதாகவும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய மக்கள் விரோதச் செயல்களுக்கு அதிமுக உறுதுணையாக இருந்து தமிழக மக்களுக்குத் துரோகம் இழைத்து வருவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
