திருப்பத்தூர்: ஜவ்வாதுமலையில் 4000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கற்திட்டைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் தமிழ்த்துறைப் பேராசிரியர் க.மோகன்காந்தி, காணிநிலம் மு. முனிசாமி ஆகியோர் மேற்கொண்ட களஆய்வில் பழமையான கற்திட்டைகளைக் கண்டறிந்து இருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பேராசிரியர் க.மோகன்காந்தி கூறியதாவது:- ஜவ்வாதுமலை என்பது கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் ஒரு கூறாகும். இம்மலை வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் பரந்து, விரிந்த மலைத் தொடராகும். இந்த மலைத்தொடரில் வேலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட மலைப்பகுதியில் 30-க்கும் மேற்பட்ட கற்திட்டைகள் எங்கள் குழுவால் கண்டறியப்பட்டுள்ளன. இவை வரலாற்றிற்கு முற்பட்ட பெருங்கற்காலம் எனப்படும். இவை 4000 ஆண்டுகள் பழமையானவை.
மு_ஜமுனாமரத்தூரிலிருந்து வீரப்பனூர், மண்டப்பாறை, கள்ளிப்பாறை வழியாக புதுக்காட்டை அடையலாம். இப்புதுக்காட்டில் வாளியர்மேடு என்னும் பகுதி அமைந்துள்ளது. 100 மீட்டர் நீளமும் 40 மீட்டர் அகலமும் உடைய சமதளமான பாறை மீது கற்திட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இவை பழங்கற்காலப் புதைவிடங்கள் ஆகும். இங்கு சுமார் 30 கற்கூடாரங்கள் அமைக்கபட்டு பிரமாண்டமாக காட்சி தருகின்றன. இதில் சிதைந்த நிலையில் 5 கற்திட்டைகளும் 25-க்கும் மேற்பட்ட கட்டுமானம் தளராத கற்திட்டைகளும் காணப்படுகின்றன. 3 அடி முதல் 5 அடி வரையிலான உயரங்களில் கற்திட்டைகள் காணப்படுகின்றன. இவை பார்ப்பதற்குக் கல்லால் ஆன வீடுகள் போலக் காட்சிதருகின்றன.
இந்த இடம் முன்னோர் புதைவிடமாகத் தெரிகிறது. இறந்துபோன முன்னோர்களை அடக்கம் செய்து, 3 பக்கங்களில் பெரிய பலகை கற்களை நிறுத்தி, மேலாக பெரிய மூடுகல்லைப் போர்த்தி வடிவமைத்துள்ளனர். கிழக்குப் பக்கம் பார்த்த நிலையில் இக்கற்திட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில சில கற்கள் சிறப்புடையனவாக உள்ளன. நான்கு பக்கங்களிலும் பலகைக் கற்களை நிறுத்தி மேலே மூடுகல்லை வைத்து மூடுயுள்ளனர். கிழக்கு பக்கம் மூடப்பட்டுள்ள கல்லில் அளவிட்டு அச்சில் வார்த்து செதுக்கியது போல இடுதுளையை வைத்துள்ளனர்வ்.
இவ்விடத்தை இம்மலை மக்கள் வாளியர்கூடாரம் என்றும் வாளியர்மேடு என்றும் வாளியர் பாறை என்றும் அழைக்கின்றனர். இக்கற்திட்டைகள் சிறிய உயரத்தில் இருப்பதால் இதனுள் பழைய காலத்தில் சித்திரக் குள்ளர்கள் வாழ்ந்தனர் என்று மக்கள் நம்புகின்றனர். பஞ்சபாண்டவர்கள் வனவாசத்தின் போது இங்கு வந்து தங்கினர் என்றும் நம்புகின்றனர்.
எனவே இவ்விடத்தை இம்மக்கள் குள்ளர் வீடு, பஞ்சபாண்டவர் குகை என்றும் அழைக்கின்றனர்.வ்_ஜவ்வாதுமலையில் இதுபோன்ற கற்திட்டைகள், கீழ்ச்சேப்பிளியில் ஏராளமான உள்ளன. 4000 ஆண்டுகள் கடந்தும் இவ்வரலாற்று எச்சங்களை மலைவாழ் மக்கள் பாதுகாத்து வருவது தமிழர் வரலாற்றையும் பண்பாட்டையும் அறிய உதவும் ஆவணங்களாக உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.