ஏற்காடு:

ற்காடு அருகே கடந்த ஆண்டு அங்குள்ள வாணீஸ்வரர் சிவன் கோயிலில் 4 கல்வெட்டுக்களை வரலாற்று ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.

இந்நிலையில் தற்போது, அங்குள்ள திரவுபதி அம்மன் கோவில் அருகே கல்வெட்டு ஒன்றினை கண்டுபிடித்துள்ளனர்.

சேலம் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர்கள் விழுப்புரம் வீரராகவன், ஆறகழூர் பொன்.வெங்கடேசன், ஆசிரியர் கலைச்செல்வன், பெருமாள், சீனிவாசன், மருத்துவர் பொன்னம்பலம், ஜீவநாராயணன், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் இந்தக் கல்வெடுகளைக் கண்டறிந்துள்ளனர்.

கடந்த ஆண்டு ஆய்வின்போது, சேர்வராயன்மலையில் உள்ள  கோயிலூர் கிராமத்தில் உள்ள  வாணீஸ்வரர் சிவன் கோயிலில் 4 கல்வெட்டுக்களை கண்டறிந்தனர். இந்நிலையில், தற்போது  சேலம் மாவட்டம் ஏற்காடு மாரமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட கேளையூர் கிராமத்தில், தொல்குடிகளின் பண்பாட்டை அறியும் நோக்கில்,  திரெளபதி அம்மன் கோவில் அருகே கல்வெட்டு ஒன்றினை கண்டுபிடித்துள்ளனர்.

இதுகுறித்து வரலாற்று ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது,

“இந்த கல்வெட்டு 13ம் நூற்றாண்டை சேர்ந்ததும், பாண்டியர் காலத்தில் பொறிக்கப்பட்டது. கல்வெட்டில் செடையின் பன்மரான திரிபுவன சக்ரவர்த்தி சுந்தர பாண்டியரின் ஆட்சிக்காலத்தில் மாரமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகள் சேலநாடு என்றும், இப்பகுதியில் சேலஞ்சுற்றி என்பவர் பொறுப்பாளராக இருந்துள்ளார் என்பது தெரிய வந்திருப்பதாகவும் கூறினார்.

மேலும் தற்போதுள்ள கோவிலூர் கிராமத்தை பெருமாமலை எனவும் முன்னோர்கள் அழைத்துள்ளதாகவும், அதுபோல இப்பகுதியில் உள்ள வானீஸ்வரர் என்ற சிவன் கோயிலில் சுவாமியை கூடலுடையார் என்று அழைத்துள்ளது தெரிய வந்ததாகவும் கூறினார்.

இந்த கோயில் வழிபாட்டு செலவிற்காகவும், பெருமாமலை நாயனார் செலவிற்காகவும் பவள வாயர் என்பவர் தானமாக நிலம் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வில் தெரிய வந்திருப்பதாக கூறினார்.