சென்னை: வேலைநிறுத்தத்தில் போக்குவரத்து ஊழியர்கள் பங்கேற்றால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழக போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், பணிச்சுமை குறைப்பு போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி நிர்வாகத்திடம் வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து நடந்த பல கட்ட பேச்சு வார்த்தைகளும் தோல்வியில் முடிந்துள்ளன.
நாளை முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தைத் தொடங்குவதாக அறிவித்து உள்ளனர். காலவரையற்ற இந்த வேலை நிறுத்தத்தின் போது தொழிலாளர்கள் பேருந்துகளை இயக்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் 9 போக்குவரத்து தொழிலாளர் சங்கங்கள் பங்கேற்றுள்ளன.
இந் நிலையில், போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்காமல் கண்டிப்பாக பணிக்கு வருமாறு போக்குவரத்துத் துறை உத்தரவிட்டு உள்ளது. நாளைய வேலை நிறுத்தத்தில் ஊழியர்கள் பங்கேற்று பணிக்கு வராமல் இருந்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.