2025 ஜூலையில் ஜப்பானுக்கு பேரழிவு காத்திருப்பதாக எதிர்காலத்தை கணிப்பதில் வல்லவரான ஒருவர் கூறியதை அடுத்து அந்நாட்டுக்கான சுற்றுலா பயணங்கள் ரத்து செய்யப்படுகின்றன.
ரியோ டாட்சுகி என்ற 70 வயது மங்கா கலைஞர் 1999ம் ஆண்டு வெளியிட்ட ‘தி பியூச்சர் ஐ சா’ (‘The Future I Saw’) என்ற புத்தகத்தில் இதை குறிப்பிட்டுள்ளார்.
2011ம் ஆண்டு சுனாமி மற்றும் வேறு பல நிகழ்வுகள் இவர் கணித்தது போல் நிகழ்ந்துள்ளதை அடுத்து அவரது இந்த கணிப்பு குறித்து மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
2025 ஜூலையில் ஜப்பானுக்கு அருகே கடலுக்கு அடியில் விரிசல் ஏற்படும் என்றும் அதனால் 2011 சுனாமியை விட மூன்று மடங்கு பெரிய சுனாமியை அது ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளார்.
மேலும், கடல் நீரும் சுடும் என்று எச்சரித்துள்ளதை அடுத்து கடலுக்கு அடியில் எரிமலை வெடிக்கக்கூடும் என்று பேசப்பட்டு வருகிறது.
ஏற்கனவே 1991ம் ஆண்டு பாடகர் பிரீடி மெர்குரி-யின் மரணம் மற்றும் 1995 கோப் நிலநடுக்கம் குறித்த இவரது கணிப்பு சரியாக நிகழ்ந்ததை சுட்டிக்காட்டிய சிலர் இவரது இந்த கணிப்பும் நிகழக்கூடும் என்று கூறிவருகின்றனர்.
இதனால் ஜப்பானுக்கான சுற்றுலா துறையில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன் பலர் தங்கள் பயணங்களை ரத்து செய்து வருகின்றனர்.