சென்னை: மெரினா கடற்கரையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை பருவ மழைக்காலம் முடிந்த பின்னர் தான் திறக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சேதமடைந்த மரப்பாதை சரி செய்யப்பட்டு இன்று திறக்கப்பட இருப்பதாக தகவல்கள் பரவிய நிலையில், மழை காலத்திற்கு பின்பே திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
மாண்டஸ் புயல் கடந்த 9ம் தேதி சென்னை அருகே மாமல்லபுரத்தில் கரையை கடந்தது. இதனால் சென்னையில் பல்வேறு பகுதிகளில் சூறாவளியுடன் கடும் கடல் சீற்றமும் ஏற்பட்டது. இதனால், சென்னை மெரினா கடற்கரை மணல் பரப்பில் மாற்று திறநாளிகள் கடற்கரையை ரசிக்கும் வகையில் அமைக்கப்பட் 380மீ. நீளம், 3மீ. அகலத்திலான மரப்பாதை, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினால், நவம்பர் 27-ல் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இது அடுத்த 12நாளில் கடல் அலையால் சேதமடைந்தது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது.
இதனையடுத்து அந்த பாதை விரைவில் சீரமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என அமைச்சர் கே.என்.நேரு, மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்திருந்தனர். சேதமடைந்த மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பாதையை சீரமைக்கும் பணி நடைபெற்று வந்த பணிகள், நேற்று இரவுக்குள் முடிக்கப்பட்டு இன்று மீண்டும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை பயன்பாட்டிற்கு வரும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை பருவ மழைக்காலம் முடிந்த பின்னர் தான் திறக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடல் அலை உள்வரும் தூரம் கணக்கிட்டு சிறப்பு பாதையின் நீளம் சற்று குறைக்கப்படவுள்ளதாகவும், மழைக்காலம் முடிந்த பிறகு பார்வையிடும் தளம் சீரமைக்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.