சென்னை:
மனித உரிமை ஆர்வலர் அர்மான் அலி மாற்றுத் திறனாளி என்பதால், வாடகை காரிலிருந்து இறக்கிவிட்ட சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.
மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் தேசிய மையத்தின் கவுவர நிர்வாக இயக்குனராக இருப்பவர் அர்மான் அலி.
மனித உரிமை ஆர்வலரான இவரும் மாற்றுத் திறனாளியாவார்.
கடந்த 19-ம் தேதி சென்னை ஏர்போர்ட்டுக்கு செல்ல ஊபர் கால் டாக்ஸியை அழைத்தபோது, அதன் ஓட்டுநர் அர்மான் அலியில் மாற்றுத் திறனாளிக்கான வீல் சேரை ஏற்ற மறுத்துவிட்டார்.
இதனால் அர்மான் அலி பெங்களூரு விமானத்தை தவறவிட்டார்.
இது குறித்து அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:
முதலில் ஊபர் கால் டாக்ஸியை அழைத்தேன். அதன் ஓட்டுநர் வர மறுத்துவிட்டார். மற்றொரு கால் டாக்ஸியை அழைத்தேன்.
நான் அமர்ந்து கொண்டேன். என் லக்கேஜ்களையும் வைத்தேன். ஆனால் என் வீல் சேரை உள்ளே வைக்க முடியவில்லை. பின் இருக்கையில் வைக்குமாறு ஓட்டுநரை கேட்டுக் கொண்டேன்.
அதற்கு மறுப்பு தெரிவித்த ஓட்டுநர்,என்னை ஏற்றிச் செல்ல மறுத்துவிட்டார். என்னை வலுக்கட்டாயமாக காரிலிருந்து இறக்கிவிட்டார்.
மற்றொரு கால் டாக்ஸியை பிடித்து ஏர்போர்ட் செல்வதற்குள் நான் செல்ல வேண்டிய பெங்களூரு விமானம் சென்றுவிட்டது.
வேறு ஒரு விமானத்தில் டிக்கெட் எடுத்து பெங்களூரு சென்றேன். பணத்தையும் கூடுதலாக செலவழித்ததோடு, அன்றைய தினம் மாலை பெங்களூருவில் நடந்த கூட்டத்திலும் கலந்து கொள்ள முடியவில்லை.
இதேபோன்ற பிரச்சினையை எல்லா மாற்றுத் திறனாளிகளும் சந்திக்கின்றனர்.
நாங்கள் சமூகத்தில் மூன்றாந்தர மக்களாகவும், சமுதாயத்துக்கு சுமையாகவும் கருதப்படுகிறோம் என்றார்.
இது குறித்து ஊபர் செய்தி தொடர்பாளர் கூறும்போது, நாங்கள் பாரபட்சம் காட்டுவதில்லை. நடந்த சம்பவத்துக்கு வருந்துகின்றோம்.
இது குறித்து சம்பந்தப்பட்ட ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.