சென்னை: மாற்றுத்திறனாளிகள் பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகளை பெற 16-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட கலெக்டர் சீத்தாலட்சுமி அறிவித்துஉள்ளார்.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ஆர்.சீத்தாலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
சென்னை மாவட்டத்தை சேர்ந்த தசைச்சிதைவு மற்றும் முதுகு தண்டுவடத்தால் 2 கால்களும், 2 கைகளும் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் மடக்கு சக்கர நாற்காலிகள் வழங்கிட ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. தசைச்சிதைவு நோய் மற்றும் முதுகு தண்டுவடத்தால் 2 கால்களும் 2 கைகளும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தேசிய அடையாள அட்டை பெற்ற மாற்றுத்திறனாளிகள் இத்திட்டத்தில் பயன் பெறலாம்.
மாற்றுத்திறனாளிகளில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அடுத்த நிலையில் பணிபுரிபவர்கள் மற்றும் சுய தொழில் புரிபவர்களுக்கும் வழங்கப்படும். முதுகு பகுதியில் அல்லது இடுப்பு பகுதியில் தண்டுவடம் பாதிக்கப்பட்டு 2 கால்களும் செயலிழந்த கல்வி பயிலும் மாணவர்களுக்கும், மத்திய, மாநில அரசுகளில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கும், 60 வயதுக்கு உட்பட்ட ஆண் மாற்றுத்திறனாளிகளுக்கும், 55 வயதுக்கு உட்பட்ட பெண் மாற்றுத்திறனாளிகளுக்கும் தேவையின் அடிப்படையில் வழங்கப்படும்.
மேற்காணும் தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை, ஆதார் அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் கூடிய விண்ணப்பங்களை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், அரசு புறநகர் மருத்துவமனை வளாகம், கே.கே.நகர், சென்னை–78 என்ற முகவரியில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ 16-ந்தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.