இயக்குநர் தியா
இயக்குநர் தியா

‘கன்னா பின்னா’. என்றபடம், சென்சாரால் சின்னா பின்னப்பட்டு கிடப்பதாக குமுறுகிறார் அந்த படத்தின் இயக்குநர் தியா. படத்தின் நாயகனும் இவரே. தற்போது இவர், “சென்சார் போர்டு அதிகாரி மதியழகன், யு சர்டிபிகேட் வேண்டும் என்றால் பணம் கொடுங்கள் என்றுகேட்கிறார்” என்று வெளிப்படையாக புகார் கூறியிருக்கிறார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் தியா தெரிவித்தாவது:
“நான், நாளைய இயக்குனர்’ குறும்பட போட்டியில் கலந்துகொண்டிருக்கிறேன். தியா படத்தில் இயக்கியதோடு நாயகனாகவும் நடித்திருக்கிறேன். நாயகியாக ‘வன்மம்’ படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நடித்த அஞ்சலி ராவ் நடித்திருக்கிறார்.
இந்தப்படத்தை சமீபத்தில் சென்சார் அதிகாரிகளுக்கு திரையிட்டு காட்டினோம். படத்தை பார்த்த தணிக்கை குழு முதன்மை அதிகாரி மதியழகன் இந்தப்படத்தில் ஆட்சேபகரமான சில விஷயங்கள் இருப்பதால் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் தான் கொடுக்கமுடியும் என கறாராக கூறிவிட்டார்.
பின்னர் அது குறித்த விளக்கம் கேட்ட என்னிடம் சில குறிப்பிட்ட வசனங்களையும் சில காட்சிகளையும், ஒரு பாடலையும் நீக்கும்படி. கூறினார். இத்தனைக்கும் வன்முறை, ஆபாசம், இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாமல் தான் இந்தப்படத்தை உருவாக்கி இருக்கிறேன்.
இயக்குநர் தியா
இயக்குநர் தியா

ஆனாலும் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் முக்கியம் என்பதாலும், அதுதான் என்னை நம்பி வந்த தயாரிப்பாளரை தேவையில்லாத நட்டத்தில் இருந்து காப்பாற்றும் என்பதாலும் சென்சார் அதிகாரி சொன்ன மாற்றங்களை செய்தேன்.
ஆனாலும் சில இடங்களில் மதியழகன் குறிப்பிட்ட காட்சிகளை, வசனங்களை நீக்கினால் கதையின் தன்மையே மொத்தமாக சிதைந்துவிடும் என விளக்கமும் கூறினேன். இவ்வளவு செய்தும் கூட ‘யு/ஏ’ சான்றிதழ் தான் தரமுடியும் என பிடிவாதம் காட்டினார் தணிக்கை அதிகாரி மதியழகன்.
இதுதவிர, படத்தின் தயாரிப்பாளரையும் வைத்துக்கொண்டே, இந்த மாதிரி படங்களை எல்லாம் ஏன் எடுத்து காசை வீணாக்குகிறீர்கள், பேசாமல் என்ன தொழில் பார்த்துக்கொண்டு இருக்கிறீர்களோ அதையே உருப்படியாக பண்ணலாமே, அல்லது படம் எடுப்பதற்கு முன் என்னை கலந்து ஆலோசித்திருக்கலாமே என தயாரிப்பாளரின் மனதை குலைக்கும் விதமாக பேசினார்.
படம் எடுப்பதற்கு இதுவரை சென்சார் என்னென்ன விதிமுறைகள் வைத்திருக்கிறதோ, அதை மீறாமல் படம் எடுப்பதற்கு, இதற்குமுன் ‘யு’ அல்லது ‘யு/ஏ’ சான்றிதழ் வாங்கிய படங்கள் தானே அளவுகோல்..? மற்ற இயக்குனர்களை போல நானும் அதனை பின்பற்றியே இந்தப்படத்தை இயக்கியுள்ளேன்.
அதனால் படம் எடுப்பதற்கு முன்பே அதுகுறித்து சென்சார் அதிகாரியிடம் ஆலோசிக்கவேண்டிய அவசியம் என்ன இருக்கிறது என மதியழகனிடம் கேள்வியும் எழுப்பினேன். மேலும், சமீபத்தில் வெளியான ஆபாசமான காட்சிகள், வசனங்கள் நிறைந்த, ஒரு படத்திற்கு எந்த அடிப்படையில் ‘யு’ சான்றிதழ் கொடுக்கப்பட்டது என்றும் கேட்டேன்.
இதனால் கோபமான மதியழகன், மற்ற படங்களை பற்றி பேச உங்களுக்கு அதிகாரமில்லை என்றார். மேலும் உங்களுக்கு ‘யு’ சான்றிதழ் வேண்டும் என்றால் நீங்கள் தாராளமாக ரிவைசிங் கமிட்டிக்கு செல்லுங்கள் என தெனாவெட்டாகவும் கூறினார்.
ஆனால் கொஞ்ச நேரத்திலேயே சமுத்திரக்கனியின் ‘அப்பா’ படம் பார்த்தீர்களா..? அதற்கு எப்படி ‘யு’ சான்றிதழ் கொடுத்தோம் தெரியுமா என அவரே இன்னொரு படம் குறித்து பேச ஆரம்பித்தார். இப்போது மட்டும் இன்னொரு படம் குறித்து நீங்கள் எப்படி பேசலாம் என நான் கேட்டேன்.
டென்சன் ஆன அவர், அருகில் இருந்த தயாரிப்பாளரிடம், இந்தப்படத்தின் ரைட்ஸ் ஏதாவது இயக்குனரிடம் கொடுத்திருக்கிறீர்களா என கேட்டார். அதற்கு ‘இல்லை’ என தயாரிப்பளார் பதில் சொன்னதும், என்னை தனது அறையைவிட்டு வெளியே செல்லுமாறு கூறிவிட்டு, தயாரிப்பாளரிடம் தனியாக நீண்ட நேரம் பேசினார்.
‘கன்னா பின்னா’ படத்தின் புகைப்படம்
‘கன்னா பின்னா’ படத்தின் புகைப்படம்

ஒரு படத்தின் தணிக்கை விபரங்கள் குறித்து பகிர்ந்துகொள்ள முதன்மையான ஆள் படத்தின் இயக்குனர் தான் என்பதை மறந்து, படத்தின் தயாரிப்பாளரிடம் பேரம் பேசியுள்ளார் மதியழகன். இந்த அதிகாரி மட்டும் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாதல்லவா..? அதனால் இவருடன் படம்பார்த்த மற்ற தணிக்கை குழு உறுப்பினர்கள் விபரங்களை நான் கேட்டேன்.
ஆனால் அந்த அதிகாரியோ, முறைப்படி ஒரு கடிதம் எழுதிக்கொடுங்கள், அதுகுறித்த விபரங்கள் உங்களுக்கு தபாலில் வரும் என்று பதில் கூறினார். ஆனால் இதுவரை எந்த தபாலும் சென்சார் அலுவலகத்தில் இருந்தோ, அது சம்பந்தப்பட்ட துறையிடமிருந்தோ வரவில்லை..
பெரிய படங்கள், சிறிய படங்கள் என பாரபட்சம் காட்டி தணிக்கை சான்றிதழ் வழங்கினால், சிறிய தயாரிப்பாளர்கள் எப்படி படம் தயாரிக்க முன்வருவார்கள்.?
வந்தவர்களும் நட்டப்பட்டு, அத்துடன் படத்தொழிலுக்கே கும்பிடு போட்டு வெளியேறும் சூழலைத்தான், தன்னிச்சையாக செயல்படும், அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் இந்த சென்சார் அதிகாரி உருவாக்குகிறார்.. அதுமட்டுமல்ல, ஒரு இயக்குனரின் பல வருட உழைப்பை, கனவை கருவிலேயே சிதைக்கும் வேலையையும் செய்கிறார்” என்று குமுறுகிறார் இயக்குனர் தியா..
மேலும், இயக்குனர் தியா முன் வைக்கும் கேள்விகள்…
எஸ்.வி.சேகர்
எஸ்.வி.சேகர்

எஸ்.வி.சேகர் போன்ற தணிக்கை குழுவில் இருக்கும் நபரே, மதியழகனிடம் தனது படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வாங்குவதற்கு ‘கபாலி’ படத்தை உள்ளே இழுத்திருக்கிறார். அதன்பின்னர்தான் அவர் தயாரித்துள்ள படத்திற்கே ‘யு’ சான்றிதழ் வழங்கப்பட்டது.. ஆனால் எங்களைப்போன்ற சிறிய படங்களை எடுப்பவர்கள் அப்படி கேள்வி எழுப்ப முடியுமா..?
படத்திற்கு ‘யு’ அல்லது ‘ஏ’ என எந்த சான்றிதழும் தராமல் ‘யு/ஏ’ தான் தருவேன் என தணிக்கை அதிகாரி மதியழகன் அடம்பிடிக்கவேண்டிய காரணம் என்ன..?
ஆபாசமான, சர்ச்சைக்குரிய சில படங்களுக்கு மட்டும் அவர் ‘யு’ சான்றிதழ் வழங்கியிருப்பது எதன் அடிப்படையில்..?
எவ்வளவோ சிரமங்களுக்கு இடையில் ஒரு படத்தை தயாரித்து ரிலீஸுக்காக கொண்டுவரும் நேரத்தில், எந்தவித காரணமும் சொல்லாமல் இல்லாமல் இப்படி சான்றிதழ் தர தணிக்கை அதிகாரி மறுப்பது ஏன்.,?
ஒரு படத்தின் இயக்குனரை வெளியே போ என சொல்லிவிட்டு, தயாரிப்பாளருடன் தனியாக் பேசும் உரிமை தணிக்கை அதிகாரிக்கு இருக்கிறதா..?” என்று கேள்வி எழுப்புகறார் தியா.
மேலும், “ரிவைசிங் கமிட்டிக்கு படத்தை அனுப்பி தயாரிப்பாளருக்கு இன்னும் செலவு வைக்க விரும்பவில்லை. அதேசமயம் தணிக்கை அதிகாரியின் பேரத்துக்கு படிந்து பணம் கொடுத்து படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வாங்கவும் விரும்பவில்லை..
வரும் டிச-9ஆம் தேதி படத்தை வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தநிலையில், தணிக்கை அதிகாரி மதியழகனின் இந்த செயலால், தடை ஏற்பட்டிருக்கிறது. ஆகவே சட்டபூர்வமாக அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு தயாராகி வருகிறேன்” என்கிறார் தியா.