சென்னை

நேற்று பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு நீதி கேட்டு நேற்று இயக்குநர் பா ரஞ்சித் பேரணி நடத்தி உள்ளார்.

திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில்படுகொலை செய்யப்பட்டு உயிரிழந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மரணத்திற்கு நீதி கேட்டு,  சென்னை எழும்பூர் லேங்க்ஸ் தோட்டச் சாலையில் இருந்து ராஜரத்தினம் விளையாட்டு மைதானம் வரையில் பேரணி நடந்தது. இந்த பேரணிக்கு பா.ரஞ்சித் தலைமை தாங்கினார்.

இந்த பேரணியில் பகுஜன் சமாஜ் கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளர் கோபிநாத், முன்னாள் நீதிபதி அரி.பரந்தாமன் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். பேரணி முடிவ்ல்ல் சென்னை ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகே நினைவேந்தல் கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் இயக்குனர் பா.ரஞ்சித்,

“ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு சரியான நீதி வேண்டும் என்ற நோக்கத்தில் அனைவரும் ஒன்றுகூடியுள்ளோம். ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு சரியான நீதி கிடைக்கும் வரை ஓயமாட்டோம். தலித் மக்களின் குரலை ஓங்கி ஒலிக்கவிடாமல் செய்கிறார்கள். எங்களுடைய உரிமைகளை கேட்கும் போது எங்களை ‘பி’ டீம் என்கிறார்கள். நாங்கள் அம்பேத்கரின் பிள்ளைகள். அதனால், நாங்கள் யார் பின்னாலும் நிற்க வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் யாரை பார்த்தும் பயப்படமாட்டோம்.

இந்த சமூகத்தை சரிசெய்ய இப்போது இல்லை ஆண்டாண்டு காலமாக பணி செய்து வருகிறோம். அதிகாரத்துக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை ரவுடி என்று சொல்வீர்களா? அப்படி என்றால் நாங்கள் எல்லாம் ரவுடிகள் தான். அறவழியில் போராடிக்கொண்டிருக்கும் எங்களை காயப்படுத்த வேண்டாம். ஆம்ஸ்ட்ராங் கொலையில் பல மறைமுக சூழ்ச்சிகள் இருக்கிறது. அதை காவல்துறை கண்டுபிடிக்க வேண்டும்.

சென்னையின் மிகபெரிய அங்கமாக ஆம்ஸ்ட்ராங் திகழ்ந்தார். சென்னையை எங்களை மீறி யாரும் ஆட்சி செய்ய முடியாது. ஆம்ஸ்ட்ராங் இங்கு பலரை உருவாக்கியுள்ளார். இங்கே மேயராக ஒருவர் உள்ளார். நீங்கள் தி.மு.க.வில் இருப்பதால் மட்டும் மேயராகிவிட முடியாது. இடஒதுக்கீடு என்ற ஒற்றாலேயே நீங்கள் மேயராக்கப்பட்டுள்ளீர்கள். நீங்கள் எல்லாம் தலித்துகளுக்கு ஆதரவாக பேசவில்லை என்றால் எதற்காக இடஒதுக்கீட்டை பயன்படுத்தி வெற்றி பெறுகிறீர்கள்..?

எத்தனை நாட்கள் தான் தலித் எம்.எல்.ஏ.க்களும், அமைச்சர்களும், எம்.பி.க்களும் அடிமைகளாகவே இருக்கப்போகிறீர்கள்..? நீங்கள் குரல் கொடுத்தால் எதற்காக நான் இங்கே வந்து பேசப்போகிறேன். திருமாவளனுக்கு எதிராக நாங்கள் ஒருநாளும் இருக்க மாட்டோம். உங்களை நாங்கள் ஒருநாளும் கைவிடமாட்டோம். பா.ஜனதாவுக்கும், ஆர்.எஸ்.எஸ்.க்கும் எதிரானவர்கள் நாங்கள். நாம் அனைவரும் ஒன்றுசேர வேண்டிய தேவை இருக்கிறது”

என்று பேசியது பரபரப்பை உண்டாக்கி உள்ளது.