சென்னை:
தமிழகத்தில், முதுநிலை மருத்துவம் படிப்புகளில், பட்டயப் படிப்புகள் பட்ட மேற்படிப்புகளாக மாற்ற மருத்துவ கவுன்சில் ஒப்புதல் வழங்கி உள்ளது.
அண்மையில் நடைபெற்ற முதுநிலை மருத்துவக் கல்விக்கான நீட் தேர்வில் தமிழக மாண வர்களே அதிக அளவில் தேர்ச்சி பெற்ற நிலையில், மருத்துவ பட்டய படிப்புகளை பட்ட மேற்படிப்புகளாக மாற்ற மருத்துவ கவுன்சில் ஒப்புதல்வழங்கி உள்ளது.
தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் தற்போதைய நிலவரப்படி 1,250 முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் உள்ளன.
அதில், அதிகபட்சமாக சென்னை மருத்துவக் கல்லூரியில் 213 இடங்களும், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் 152 இடங்களும், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் 134 இடங்களும் இருக்கின்றன.
இந்த நிலையில், தமிழகத்தில் 14 பிரிவுகளில் முதுநிலை மருத்துவப் பட்டயப் படிப்புகளுக்கான 384 இடங்களை பட்ட மேற்படிப்புகளாக மாற்றுவதற்கு இந்திய மருத்துவக் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவு மாநில மருத்துவக் கல்வி இயக்குநரகத்துக்கு விரைவில் அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து, எதிர்வரும் கல்வியாண்டில் (2019-20) மாநிலத்தில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் 1,758-ஆக அதிகரிக்க உள்ளது. இதனால், எதிர்வரும் கல்வியாண்டில், மாநிலத்தில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிப்போர் அதிகரிக்கக் கூடும் என்றும், நாட்டிலேயே அதிக மருத்துவ மேற்படிப்பு இடங்களைக் கொண்ட மாநிலமாக தமிழகம் உருவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தச் சூழலில், தமிழகத்தில் முதுநிலை படிப்புகளுக்குக் கூடுதலாக 157 இடங்களை ஒதுக்குமாறு இந்திய மருத்துவக் கவுன்சிலிடம் மாநில மருத்துவக் கல்வி இயக்குநரகம் வலியுறுத்தியது. அதன் அடிப்படையில் தற்போது 124 இடங்களை அதிகரிக்க மருத்துவக் கவுன்சில் அனுமதி அளித் துள்ளது.
இதற்கு நடுவே, பல ஆண்டு காலமாக இருந்து வரும் முதுநிலை மருத்துவப் பட்டயப் படிப்பு இடங்களை, பட்ட மேற்படிப்புகளாக மாற்றுவதற்கு மாநில மருத்துவக் கல்வி இயக்குநரகம் அண்மையில் விண்ணப்பித்திருந்தது. அதனைப் பரிசீலித்த இந்திய மருத்துவக் கவுன்சில் வாரிய உறுப்பினர்கள், 14 பிரிவுகளில் உள்ள 384 முதுநிலை பட்டயப் படிப்பு இடங்களை பட்ட மேற்படிப்புகளாக மாற்ற அனுமதி அளித்துள்ளனர்.
இதுகுறித்து, மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் எட்வின் ஜோ கூறும்போது, சென்னை மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி, மதுரை மருத்துவக் கல்லூரி, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி, கோவை மருத்துவக் கல்லூரி ஆகிய 6 கல்லூரிகளில் மட்டுமே முதுநிலை மருத்துவப் பட்டயப் படிப்புகள் உள்ளன.
இக்கல்லூரிகளில் செயல்படும் 14 பிரிவுகளில் உள்ள 384 முதுநிலை பட்டயப் படிப்பு இடங்களும் வரும் கல்வியாண்டில் பட்ட மேற்படிப்புகளாக மாற்றப்பட உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
:களாக மாற்றம்!