ஜலந்தர்: பாதிரியார் அந்தோணி உட்பட 6 நபர்களிடமிருந்து, கணக்கில் வராத ஹவாலா பணம் ரூ.9.66 கோடி கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த பாதிரியார், ‘டயோசிஸ் ஆஃப் ஜலந்தர்’ என்ற அமைப்பைச் சேர்ந்தவர்.
இதுகுறித்து கூறப்படுவதாவது; பஞ்சாப் மாநிலத்திலுள்ள அம்பாலா நகருக்கு, 3 கார்களில் கொண்டுசெல்லப்பட்ட ரூ.9.66 கோடி பணத்தை பஞ்சாப் காவல்துறையினர் கைப்பற்றி, சம்பந்தப்பட்ட 6 நபர்களை கைது செய்துள்ளனர்.
இவர்களில் ஒருவர் கத்தோலிக்க பாதிரியார் அந்தோணி. இவர் கேரளாவில் கன்னியாஸ்திரியை வன்புணர்வு செய்த புகாரில் சிக்கி கைதான பிஷப் ஃபிராங்கோ முலக்கல் என்பவரின் நெருங்கிய உதவியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
“இந்தப் பணம் கணக்கில் வராத ஒன்று. இந்தப் பணம் எப்படி வந்தது என்பதை நிரூபிக்க எந்த ஆவணங்களும் சம்பந்தப்பட்டவர்களிடம் இல்லை” என்று பஞ்சாப் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், டயோசிஸ் ஆஃப் ஜலந்தர் அமைப்பின் சார்பில், “அந்தப் பணம் கறுப்புப் பணம் கிடையாது. எங்களிடம் மறைப்பதற்கு எதுவுமில்லை. அனைத்திற்கும் ரசீது இருக்கிறது” என்று மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
– மதுரை மாயாண்டி