இடைத்தேர்தல் தோல்வி: கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகினார் குண்டுராவ்

Must read

பெங்களூர்:

ர்நாடகாவில் நடைபெற்று முடிந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்த நிலையில், கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியை தினேஷ் குண்டுராவ் ராஜினாமா செய்துள்ளார்.

கர்நாடகாவில் டிசம்பர் 5ந்தேதி  நடைபெற்ற 15 சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில் 12 தொகுதி களில் பாஜக வெற்றி பெற்றது. காங்கிரஸ் வெறும் 2 தொகுதிகளில் மட்டுமே வென்றது.

இதனால் தோல்விக்கு பொறுப்பேற்று முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவரம்,  எதிர்க்கட்சித் தலைவருமான சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

இந்த நிலையில், மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவும் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து, காங்கிரஸ் தலைமைக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

தனது ராஜினாமா குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தினேஷ் குண்டுராவ், இடைத்தேர்தலில், எனது சக்திக்கும் மீறி தேர்தல் பணியாற்றினேன். இருந்தும்கூட, காங்கிரஸ் தோற்றுள்ளதால், அதற்கு பொறுப்பேற்று எனது ராஜினாமா முடிவை அறிவிக்கிறேன். இதுகுறித்து கட்சி தலைமைக்கு கடிதம் அனுப்பியுள்ளேன். கட்சியை வலுப்படுத்த முழு கால நேரத்தையும் அர்ப்பணிப்பு செய்ய உள்ளேன் என்று கூறினார்.

அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், மாநில காங்கிரஸ் தலைவராக கட்சிக்கு சேவை செய்திருப்பது எனக்கு ஒரு மரியாதை, தேர்தல் முடிவுகள் மனச்சோர்வை ஏற்படுத்தியுள்ளன, ஆனால் ஒரு ஜனநாயகத்தில் மக்கள் நீதிமன்றம் இறுதித் தீர்ப்பை அளிக்கிறது, அது மதிக்கப்பட வேண்டும். நான் காங்கிரஸ் கட்சிக்கு விசுவாசமான சிப்பாயாக தொடர்ந்து பணியாற்றுவேன் என்று பதிவிட்டு உள்ளார்.

முன்னதாக, லோக்சபா தேர்தலின்போதும் காங்கிரஸ் கர்நாடகாவில் படுதோல்வியை சந்தித்தது. எனவே அப்போதே தனது தலைவர் பதவியை தினேஷ் குண்டுராவ் ராஜினாமா செய்ய முன் வந்தார். அப்போது, காங்கிரஸ் மேலிடம் அவரது ராஜினாமாவை ஏற்கவில்லை. இந்த நிலையில், தற்போதும், குண்டுராவ் தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பி உள்ளார்.

More articles

Latest article