பாலமுருகன் திருக்கோயில், தாண்டிக்குடி, திண்டுக்கல் மாவட்டம்
முருகப்பெருமான் தன் ஆறாவது படைவீடான பழமுதிர்ச் சோலையில் மலைவளம் கண்டபிறகு, தாண்டிக்குடி வருகிறார். முருகன் இங்கிருக்கும் போதுதான் அகஸ்தியரின் சீடரனான இடும்பன் கயிலாயத்திலிருந்து சிவகிரி, சக்திகிரி என் இரண்டு மலைகளை சுமந்து கொண்டு பழநி வந்து சேருகிறார். இதை அறிந்த முருகன் இந்த இரண்டு மலைகளில் ஒன்று தனக்கு இருப்பிடமாகிக் கொள்ள உரியது என கருதி, தாண்டிக்குதிக்கிறார். இதன் காரணமாகவே இந்த இடம் “தாண்டிக்குதி” என்ற அழைக்கப்பட்டு, காலப்போக்கில் மருவி “தாண்டிக்குடி” ஆனது.
பன்றிமலை சுவாமிகளின் வேண்டுகோளின்படி முருகனே கோயில் கட்ட தேவையான பொருள்களுக்கு அது சம்பந்தப்பட்ட நபர்களின் கனவில் தோன்றி, அந்தப் பொருள்களை கொடுக்க கூறினார் என்றும், தற்போது கோயிலில் உள்ள மூலவர் சிலை கூட ஸ்தபதி ஒருவரின் கனவில் முருகனே சென்று கூறி அதன் மூலம் நிறுவப்பெற்று, திருப்பணிவேலைகள் முருகப்பெருமானின் மேற்பார்வையிலேயே முடிந்தது.
கணபதி, முருகன், மயில், இடும்பன், பைரவர், அகஸ்தியர் மற்றும் நவக்கிரகங்களுடன் 1949ல் மிகவும் சிறப்பாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. இங்கு மூலவரான முருகன் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். பழனி முருகன் கோயிலில் உள்ள முலவரின் அமைப்பே இக்கோயிலும் உள்ளன. இந்தக் கோயிலுக்கு மருதநாயகமும், கணபதியும் தலைமைப்பூசாரியாக இருந்திருக்கிறார்கள். பழனிக்கே முருகன் இங்கிருந்து தான் சென்றிருக்கிறார். எனவே பழனிக்கு செல்பவர்கள் இங்குள்ள தாண்டிக்குடி பாலமுருகனை தரிசித்த பின் சென்றால்தான் முழுமையான பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
இங்கிருந்து பழநிக்கு தாண்டிக்குதித்துச் சென்ற முருகப்பெருமானை, பத்தொன்பது சித்தர் என்று அழைக்கப்படும் ஸ்ரீலஸ்ரீ பன்றிமலை சுவாமிகள் (இயற்பெயர் ராமசாமி) தாண்டிக்குடிக்கே பாலமுருகன் வடிவில் அழைத்து வந்து விட்டார்கள். அவர் மறுபடியும் முருகனை அழைத்து வந்ததற்கு அடையாளமாக தாண்டிக்குடி மலையில் முன்று நாட்கள் தொடர்ந்து அனைவரும் பார்க்கும்படி ஓர் ஜோதி தோன்றியது. இதனாலேயே இந்த மலை “ஜோதி மலை” என வழங்கப்பட்டது. மூன்று நாட்களும் தொடர்ந்து ஜோதி தெரிந்து முடிந்தவுடன், அந்த இடத்திற்கு சென்று பார்த்த போது, முருகப்பெருமான் மறுபடியும் தாண்டிக்குடிக்கு வந்து விட்டதற்கு அறிகுறியாக திருவடிச்சுவடுகள் மண்ணில் பதிந்தால் எப்படி இருக்குமோ அப்படி அந்தக்கல்லில் திருவடிச்சுவடு காணப்பட்டது. மேலும் அதற்கு அடுத்தாற்போல் உள்ள பாறையில் முருகனின் வாகனமான மயில் ஒரு பாம்பை கவ்விக் கொண்டிருப்பது போன்ற தோற்றமும் காணப்பட்டது. (இந்த தோற்றங்களை நாம் இப்போதும் பார்க்கலாம்).
இக்கோயில் தீர்த்தமாக அங்குள்ள பாறையிலேயே சிறு பள்ளத்தில் என்றுமே வற்றாத தீர்த்தம் வருகிறது. இக்கோயிலில் இருந்து 75 அடி தூரத்தில் ஒரு மண்மேடு உள்ளது. இந்த மண்ணே இக்கோயிலின் திருமண்ணாக வாய்த்திருக்கிறது. இங்கு வரும் பக்தர்களுக்கு இத்திருமண்ணே விபூதி பிரசாதமாக அளிக்கப்படுகிறது.
திருவிழா:
பங்குனி உத்திரத்திருவிழா, மாத கார்த்திகை, திருக்கார்த்திகை, வைகாசி விசாகம்.
வேண்டுகோள்:
திருமணத்தடை நீங்க, குழந்தைச் செல்வம் பெற, கல்வியில் சிறந்து விளங்க, இறைவனை வேண்டிக்கொள்ளலாம்.
நேர்த்திக்கடன்:
வேண்டுகோள் நிறைவேறியவர்கள் முருகனுக்குப் பால் திருமுழுக்காட்டு செய்து, சந்தனக்காப்பு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து, காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்