கோவை:

திண்டுக்கல்லைச் சேர்ந்த 22வயது 108 ஆம்புலன்ஸ் ஊழியர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கோவையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் ஆம்புலன்ஸ் ஊழியர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சத்தில் உள்ளது. நாளுக்கு நாள்  பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையை போன்று,  உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் பணியாற்றி வரும், மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், தூய்மை பணியாளர்கள் என பலரும், வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர். சிலர் உயிரிழந்தும் உள்ளனர்.

இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு பதிவாகியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கணேசன் என்ற 22 வயதுடைய இளைஞன், கோவை அவினிசி பகுதியில்  108 ஆம்புலன்ஸில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு கடந்த 18ந்தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டது. அதையடுத்து சோதனை செய்ததில், அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.  இதையடுத்து, கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில், இன்று (ஜூன் 24) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது.

ஆம்புலன்ஸ் ஊழியர் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்தது பொதுமக்கள் மட்டுமின்றி ஆம்புலன்ஸ் ஊழியர்களிடையேயும் , சோகத்தையும்,  பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.