சென்னை: தினமலர் முன்னாள் ஆசிரியர் ஆர். கிருஷ்ணமூர்த்தி வயது முதிர்வு காரணமாக இன்று காலை காலமானார். அவரது மறைவுக்கு அனைத்து தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தினமலர் நிறுவனர் டி.வி.ராமசுப்பையரின் இரண்டாவது மகன் ஆர். கிருஷ்ணமூர்த்தி. இவர் 1933 ம் ஆண்டு நாகர்கோவில் அருகே உள்ள வடிவீஸ்வரம் கிராமத்தில் பிறந்தவர். இவருக்கு வயது 88. வயது முதிர்வு காரணமாக, உடல்நலம் பாதிக்கப்பட்டவர் இன்று காலை இறந்ததாக கூறப்படுகிறது.
முனைவர் பட்டம் பெற்றவரான இரா.கிருஷ்ணமூர்த்தி, தினமலர் பத்திரிகை ஆசிரியராகவும் பணியாற்றிவர். கைகளால் அடுக்கப்பட்டு, பத்திரிகைகள் தயாராகி வந்த காலத்தில், அதை டிஜிட்டல் முறைக்கு மாற்றும் வகையில், கணினி பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் தமிழ் எழுத்துருக்களை உருவாக்க துணைபுரிந்தவர்.
நாணயங்களை சேகரிப்பதிலும், அது தொடர்பான ஆய்வுகளையும் நடத்தி சங்க காலத்தில் பழந்தமிழ் மன்னர்கள் வெளியிட்ட நாணயங்களை கண்டுபிடித்தவர். சங்ககால நாணயங்களைத் தேடி, கண்டுபிடித்து, ஆராய்ந்து, தமிழர் நாகரிக வரலாற்றுத் தொன்மையை நிறுவியவர். இவர் நாணயவியல் அறிஞர் என போற்றப்படுகிறார்.
இவரது நாணயவியல் கண்டுபிடிப்புகள், தமிழ் செம்மொழி என்ற தகுதியை பெற, முக்கிய ஆதாரமாக அமைந்தது. . தமிழுக்கு இவர் செய்த நற்பணியை பாராட்டி 2012-2013 ஆண்டுக்கான தொல்காப்பியர் விருது குடியரசு தலைவரால் வழங்கப்பட்டது.
இங்கிலாந்து நாட்டில் உள்ள லண்டன் ராயல் நாணயவியல் கழகம் இவரை கவுரவப்படுத்தி, கவுரவ உறுப்பினராக அங்கீகரித்துள்ளது.
தினமலர் முன்னாள் ஆசிரியர் ஆர்.கிருஷ்ணமூர்த்திக்கு பத்திரிகை காலம் காம் இணையதளம் சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்படுகிறது.
இரா.கிருஷ்ணமூர்த்தி மறைவிற்கு, பத்திரிகை துறையினர், அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.