சென்னை

சென்னை ஆர் கே நகரில் தினகரனுக்கு எதிராக கோஷமிட்டவர்களை அவருடைய ஆதரவாளர்கள் அடித்து விரட்டி உள்ளனர்.

சென்னை ஆர் கே நகர் சட்டமன்ற உறுப்பினர் டி டி வி தினகரன்.   இவர் தேர்தலின் போது ரூ.20 டோக்கனாக அளித்து தேர்தலுக்கு பின் ரூ. 10000 தருவதாக வாக்காளர்களிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.   சில நாட்கள் முன்பு தொகுதி ஆலய விழா ஒன்றுக்கு சென்றிருந்த தினகரனுக்கு ரூ.20 நோட்டை காட்டி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

தண்டையார்பேட்டை நேதாஜி நகரை சேர்ந்த மாணவர்கள் சிலர் புனேவுக்கு பள்ளி சுற்றுலா சென்றபோது அங்கு ஏரியில் விழுந்து மரணம் அடைந்தனர்.   அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி நிதி உதவி அளிக்க தினகரன் தண்டையார்ப்பேட்டை சென்றார்.   சென்ற முறை அவருக்கு மக்கள் இடையே கடும் எதிர்ப்பு இருந்ததால் இம்முறை தனது ஆதரவாளர்களுடன் சென்றார்.

அங்கு சென்று நிதி உதவி அளித்து விட்டு திரும்பிய தினகரனை இம்முறையும் மக்கள் சூழ்ந்துக் கொண்டு ரூ. 20 நோட்டை காட்டி கோஷம் எழுப்பினர்.   தினகரன் உடன் வந்த அவர் ஆதரவாளர்கள் கூட்டத்தினரை தாக்க தொடங்கினார்கள்.    இதை தடுக்க வந்த காவல்துறையினரிடம் தினகரன் ஆதரவாளர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.   மேலும் கூட்டம் கூடி தினகரனுக்கு மிகவும் எதிர்ப்பு கிளம்பியது.

அதை ஒட்டி காவல்துறையினர் அங்கு கூடி இருந்தவர்களில் ஆண்களை கைது செய்து அப்புறப்படுத்தினார்கள்.  அதன் பிறகு அங்கிருந்த பெண்களும் கலைந்து சென்றனர்.   அனைவரும் சென்ற பின் டிடிவி தினகரன் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.