திண்டுக்கல் மாவட்டம் , ரெட்டியார் சத்திரம், கதிர் நரசிங்கப்பெருமாள் (கத்ரிநரசிங்கர்)ஆலயம்
இப்பகுதியை ஆண்ட மன்னர் ஒருவருக்கு சிவன், பெருமாள் இருவருக்கும் ஒரே இடத்தில் கோயில் கட்ட வேண்டுமென்ற ஆசை இருந்தது. ஆனால், எங்கு கோயில் அமைப்பது? எப்படி சிலை வடிப்பது? என்ற குழப்பம் இருந்தது.ஒருசமயம் சிவன், பெருமாள் இருவரும் அவரது கனவில் தோன்றி, இத்தலத்தைக் காட்டி கோயில் எழுப்பும்படி கூறினர். அதன்படி இங்கு வந்த மன்னர், ஓரிடத்தில் சுயம்புவாக சிவலிங்கம் இருந்ததைக் கண்டார்.
பின்பு, பெருமாள் சிலை வடித்த மன்னர் லிங்கத்தின் அருகிலேயே பிரதிஷ்டை செய்து, கோயில் எழுப்பினார்.பெருமாளுக்கு, “நரசிங்கப்பெருமாள்’ என பெயர் சூட்டினார். காலப்போக்கில் பெருமாள் பிரசித்தி பெறவே, அவரது பெயரிலேயே தலமும் அழைக்கப்பெற்றது.
தல சிறப்பு:
மூலஸ்தானத்தில் பெருமாளுக்கு அருகிலேயே சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இது சூரியதோஷ நிவர்த்தி தலம் ஆகும். சக்கரத்தாழ்வார் தனிச்சன்னதியில் பதினாறு கரங்களுடன், அக்னி ஜுவாலை கிரீடம் அணிந்த நிலையில் காட்சி தருகிறார்.
இவரைச் சுற்றிலும் காயத்ரி மந்திர தேவதைகளின் சிற்பம் பொறிக்கப்பட்டிருக்கிறது. சக்கரத்தாழ்வாருக்கு மேலே இரணியனை சம்ஹாரம் செய்த நரசிம்மரும், பாதத்திற்குக் கீழே இருபுறமும் கருடாழ்வார் வணங்கியபடி இருக்கும் லட்சுமி நரசிம்மரும் காட்சியளிக்கின்றனர்.
சக்கரத்தாழ்வார் பின்புறமுள்ள யோக நரசிம்மர், நான்கு கைகளிலும் சக்கரம் ஏந்தியிருக்கிறார்.
பொது தகவல்:
இத்தல இறைவன் பத்மம் விமானத்தின் கீழ் அருள்பாலிக் கிறார்.பிரகாரத்தில் வடக்கு நோக்கிய வீர ஆஞ்சநேயர் தனிச்சன்னதியில் இருக்கிறார். இவரது சிலை ஒரே கல்லில் புடைப்புச் சிற்பமாக வடிக்கப்பட்டிருப்பது சிறப்பான அமைப்பு.
இத்தலத்திலிருந்து சற்று தூரத்தில் உள்ள குன்றின் மீது கோபிநாதர் (கிருஷ்ணர்) கோயில் இருக்கிறது.கிருஷ்ண ஜெயந்தி விழாவின்போது, அக்கோயிலில் இருந்து கிருஷ்ணர், இங்கு எழுந்தருளி உறியடி உற்சவம் காண்பார்.
தலபெருமை:
ஒரே சன்னதியில் சிவன், பெருமாள்:மூலஸ்தானத்தில் சுவாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் சங்கு, சக்கரம் ஏந்தி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இடது கையை இடுப்பில் வைத்திருக்கிறார். இவர் நரசிங்கப்பெருமாள் என்ற பெயரில் அழைக்கப்பட்டாலும், நரசிம்ம முகம் கிடையாது.
சாந்த மூர்த்தியாகவே காட்சி தருகிறார்.கருவறை மற்றும் கோஷ்டச் சுவருக்கு இடையே மூலஸ்தானத்தை மட்டும் வலம் வரும் வகையில் உள்பிரகாரம் ஒன்றுள்ளது.
இது மிகவும் புராதனமான கோயில்களில் மட்டுமே காணப்படும் அமைப்பாகும். சன்னதி எதிரில் கருடாழ்வார் தனிச்சன்னதியில் இருக்கிறார்.மூலஸ்தானத்தில் பெருமாளுக்கு அருகிலேயே சிவலிங்கம் இருக்கிறது.
முதலில் பெருமாளுக்கும், அடுத்து சிவனுக்கும் பூஜை செய்கிறார்கள்.சிவனுக்குரிய பரிவார மூர்த்தியான பைரவர் பிரகாரத்தில் தனிச்சன்னதியில் இருக்கிறார். தேய்பிறை அஷ்டமி நாட்களில் இவருக்கு விசேஷ பூஜை உண்டு.
சூரியதோஷ நிவர்த்தி:
இத்தலத்தில் அருளும் பெருமாளுக்கு, கத்ரிநரசிங்கர் என்றும் பெயருண்டு. கத்ரி என்பது சூரியனின் அதிகபட்ச ஒளியைக் குறிக்கும் பெயராகும்.இத்தலத்து பெருமாள், சூரியன் தொடர்பான தோஷங்களை நீக்குபவராக அருளுவதால் இப்பெயரில் அழைக்கப்படுகிறார்.
ஜாதகத்தில் சூரியதசை இருப்பவர்கள், அக்னி நட்சத்திர நாட்களில் பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வேண்டிக் கொள்கிறார்கள்.சுவாமிக்கு வலப்புறம் கமலவல்லி தாயார் சன்னதி இருக்கிறது.
குழந்தைகள் கல்வியில் சிறப்பிடம் பெற, இங்குள்ள லட்சுமி ஹயக்ரீவருக்கு ஏலக்காய் மாலை அணிவித்து வேண்டிக்கொள்கிறார்கள்.
சக்கரத்தாழ்வார் சிறப்பு:
சக்கரத்தாழ்வார் தனிச் சன்னதியில் பதினாறு கரங்களுடன், அக்னி ஜுவாலை கிரீடம் அணிந்த நிலையில் காட்சி தருகிறார். இவரைச் சுற்றிலும் காயத்ரி மந்திர தேவதைகளின் சிற்பம் பொறிக்கப்பட்டிருக்கிறது.
சக்கரத்தாழ்வாருக்கு மேலே இரணியனை சம்ஹாரம் செய்த நரசிம்மரும், பாதத்திற்குக் கீழே இருபுறமும் கருடாழ்வார் வணங்கியபடி இருக்கும் லட்சுமி நரசிம்மரும் காட்சியளிக் கின்றனர். சக்கரத்தாழ்வார் பின்புறமுள்ள யோக நரசிம்மர், நான்கு கைகளிலும் சக்கரம் ஏந்தியிருக்கிறார்.
குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முன்பாக, இவரது சன்னதியில் வேண்டிக்கொள்கிறார்கள். இதனால் அவர்கள் கல்வியில் சிறப்பிடம் பெறுவர் என நம்புகிறார்கள்.
திருவிழா:
வைகாசியில் நரசிம்மர் ஜெயந்தி, புரட்டாசி சனிக்கிழமைகள், வைகுண்ட ஏகாதசி.
பிரார்த்தனை:
திருமணம், புத்திர தோஷங்கள் நீங்க சுவாமிக்கு எலுமிச்சை, துளசி மாலை அணிவித்து, நெய் தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.
நேர்த்திக்கடன்:
சுவாமிக்கு வஸ்திரம் அணிவித்து, சர்க்கரைப்பொங்கல் நைவேத்யம் படைத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.