போபால்

மோடி அரசு கடந்த 2014 ஆம் ஆண்டு முதலே தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை நடத்தி வருவதாகக் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கூறி உள்ளார்.

மோடியின் பாஜக அரசு தொடர்ந்து பல பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயம் ஆக்கி வருகிறது.  இதற்குக் காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.   ஆனால் ஆளும் பாஜக அரசு இந்த எதிர்ப்பை கருத்தில் கொள்வதில்லை.   பல பொதுத் துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதாக அறிவித்து அந்த நிறுவனங்களைத் தனியாருக்கு விற்று வருகிறது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்தியப்பிரதேச முதல்வருமான திக்விஜய் சிங் ஒரு நிகழ்வில், “பாஜக என்பது வலது சாரி கொள்கையைக் கொண்ட கட்சி ஆகும். நாட்டில் முதன்முதலாக ஆர் எஸ் எஸ் கொள்கையுடைய ஓர் கட்சி ஆட்சியில் உள்ளது.   இந்த அரசு 2014 முதலே தொழிலாளர்கள் விரோத நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பல பொதுத் துறை நிறுவனங்களைத் தனியார் மயம் ஆக்குவதில் மோடி அரசு தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது.  இதற்காக இந்த நிறுவனங்கள் நஷ்டமடைவதாகக் கூறி இந்த நிறுவனங்கள் திறமையற்றவை என ஒரு கருத்தை உண்டாக்கி வருகிறது.    எனவே இந்த நிறுவனங்களைத் தனியாருக்கு விற்பதாக மக்களை ஏமாற்றி வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.