சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவர்களுக்கு இங்கிலாந்து அரசு கடந்த இரண்டு ஆண்டுகளில் அரை மில்லியன் பவுண்டுகளுக்கு மேல் செலவிட்டுள்ளது.

அரசு திட்டங்கள் மற்றும் பிரச்சாரங்களை விளம்பரப்படுத்தவும் இளைஞர்களை ஈர்க்கவும் 200-க்கும் மேற்பட்ட இன்ஃப்ளூயன்சர்கள் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பொதுத் தொடர்பு நிறுவனமான டேன்ஜரின் தகவல் அறியும் உரிமை (FoI) சட்டத்தின் கீழ் பெற்ற தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, தி கார்டியன் பத்திரிகை இந்த விவரங்களை வெளியிட்டுள்ளது. இந்த செலவினம் உள்துறை, நீதி, பாதுகாப்பு மற்றும் வேலை–ஓய்வூதிய அமைச்சகங்களின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024 தொடக்கத்திலிருந்து மட்டும், சமூக ஊடக பிரபலங்களுக்கான செலவு £5 லட்சத்தைத் (இந்திய மதிப்பில் ரூ. 6 கோடி) தாண்டியுள்ளது. அரசு துறைகள் மொத்தமாக 215 சமூக ஊடக உள்ளடக்க உருவாக்குநர்களை (content creators) பணியமர்த்தியுள்ளன.

2024-ல் 89 பேர் பயன்படுத்தப்பட்ட நிலையில், இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 126 ஆக உயர்ந்துள்ளது.

இதில் இங்கிலாந்து அரசின் கல்வித் துறை மிக அதிகமாக செலவிட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது, 2024 முதல் இதுவரை £3.5 லட்சம் செலவழித்துள்ளது.

கடந்த ஆண்டு 26 பேரை பயன்படுத்திய நிலையில், இந்த ஆண்டு 53 இன்ஃப்ளூயன்சர்களை கல்வித் துறை பயன்படுத்தியுள்ளது.

சிறை அதிகாரிகள், நன்னடத்தை அதிகாரிகள் மற்றும் நீதிபதிகளுக்கான ஆட்சேர்ப்பு பிரச்சாரங்களுக்காக நீதி அமைச்சகம் 12 சமூக ஊடக பிரபலங்களை பயன்படுத்தியுள்ளது.

இளம் வயதினரை அடைய டிக்டாக், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களை அரசு முக்கிய கருவியாக பயன்படுத்துகிறது.


உதாரணமாக, விஞ்ஞானி சைமன் கிளார்க், பிரதமர் கீர் ஸ்டார்மருடன் நடத்திய வீடியோ அழைப்பை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். இதை 73,000 பேர் பார்த்துள்ளனர்.

அதேபோல், சமூக செயற்பாட்டாளர் அன்னா ஒயிட்ஹவுஸ், கல்வி அமைச்சர் பிரிட்ஜெட் பிலிப்சனுடன் குழந்தை பராமரிப்பு விவகாரங்கள் குறித்து பேசிய வீடியோ, 4.4 லட்சம் பேரை சென்றடைந்துள்ளது.

பத்திரிகையாளர் சந்திப்புகளில் வரம்புமீறிய கேள்விகள் கேட்கப்படுவதாகக் கூறி இங்கிலாந்து அரசு வழக்கமாக மேற்கொள்ளும் மதிய நேர சந்திப்புகளை ரத்து செய்துள்ளதுடன் பொதுவாக பத்திரிகையாளர் சந்திப்பு குறைக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

இந்த நிலையில் பாரம்பரிய ஊடகங்களைப் புறக்கணித்து சமூக ஊடக பிரபலங்களை அரசு பயன்படுத்தி வருவதாக விமர்சனம் எழுந்துள்ளது.

அதேவேளையில் செயற்கையான அரசியல் பேச்சுக்களை மக்கள் விரும்பவில்லை என்றும் ஜென் Z இளைஞர்களை ஈர்க்கும் தரமான உள்ளடக்கம் அவசியம் என்று கூறும் சிலர் “இன்ஃப்ளூயன்சர்களைப் பயன்படுத்துவது தவறு இல்லை” என்று வாதிடுகின்றனர்.

மேலும், காசாவில் போரில் இஸ்ரேலுக்கு ஆதரவான கருத்துகளை பரப்ப அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் சமூக ஊடக செல்வாக்குமிக்கவர்களுக்கு பணம் வழங்கியதாக சமீபத்தில் வெளியான அறிக்கையை சுட்டிக்காட்டும் அவர்கள், அக்டோபரில், இஸ்ரேல் தனது பிம்பத்தை மேம்படுத்த மூன்று அமெரிக்க PR நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

[youtube-feed feed=1]