போபால்
ஜோதிர் ஆதித்ய சிந்தியா ராஜினாமா குறித்து மூத்த காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் கருத்து தெரிவித்துள்ளார்
மத்தியப் பிரதேச மன்னர் குடும்ப வாரிசான ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கு ராஜ்யசபா பதவி ஆசை காட்டி பா.ஜ.க,வில் சேர வைத்துள்ளது,கட்சியின் டெல்லி மேலிடம்.
பாட்டி, தந்தை என மன்னர் குடும்பத்துக்குப் பல பதவிகளை வழங்கிய காங்கிரசை விட்டு சிந்தியா விலகியது ஏன்?
மத்தியப்பிரதேச முன்னாள் காங்கிரஸ் முதல்வர் திக்விஜய் சிங் மனம் திறந்து பேசுகிறார்.
‘’கடந்த மக்களவை தேர்தலில் குணா தொகுதியில் தோற்றது முதலே சிந்தியா, விரக்தியின் விளிம்பிலேயே இருந்தார். அவர் அந்த தோல்வியை எதிர் பார்க்கவில்லை.
கடந்த சில மாதங்களாகவே அவர் அமித்ஷா உள்ளிட்ட பா.ஜ.க.தலைவர்களுடன் தொடர்பில் இருந்தார்.
காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது உள்ளிட்ட பல பிரச்சினைகளில் சிந்தியா , பா.ஜ.க.வுக்கு ஆதரவாகவே குரல் கொடுத்தார்.
உள்ளூர் பா.ஜ.க.வினர், சிந்தியா தங்கள் கட்சியில் சேர்வதை விரும்பவில்லை.சிந்தியா இல்லாமலேயே ,மத்தியப் பிரதேச காங்கிரஸ் அரசை தங்களால் கவிழ்க்க முடியும் என அமித்ஷாவிடம் அவர்கள் கூறினர்.
ஆனால் அந்த முயற்சிகளை நாங்கள் ஒவ்வொன்றாக முறியடித்தோம். பா.ஜ.க.வின் முயற்சிகள் தோல்வி அடைந்த நிலையில் தான் சிந்தியாவையும், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களையும் இழுக்க அமித்ஷா முடிவு செய்தார்.
இதனைத் தெரிந்து சிந்தியாவைச் சமாதானம் செய்ய முடிவு எடுத்தேன்.’உங்களைச் சந்திக்க வேண்டும்’’ என்று போனில் தெரிவித்தேன். அவரோ தான் வெளி ஊரில் இருப்பதாகக் கூறிவிட்டார். ஒரு கட்டத்தில் எனது போன் அழைப்புகளை அவர் ஏற்கவே இல்லை.
ஒரு விஷயம் தெரியுமா? சிந்தியாவுக்கு மத்தியப்பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் பதவி அல்லது துணை முதல்-அமைச்சர் கொடுக்க தயாராகவே இருந்தோம். ஆனால் அவர் அவசரப்பட்டு விட்டார்.
கமல்நாத் அரசு சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கு கோரும் போது, நீங்கள் ஆச்சரியங்களைப் பார்க்கப்போகிறீர்கள்” என்று கண் சிமிட்டுகிறார், திக்விஜய் சிங்.