பெங்களூரு:
நஷ்ட ஈடு வழக்கை சந்திக்க தாம் தயாராக உள்ளதாக கர்நாடகா காவல்துறை அதிகாரி.,ரூபா கூறியுள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, சொத்து குவிப்பு வழக்கில், நான்காண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு தற்போது பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளார். அந்தச் சிறையில் அவருக்கு பல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இந்த வசதிகளை சசிகலாவுக்கு செய்து கொடுத்தமைக்காக சிறைத் துறை, டி.ஜி.பி., சத்யநாராயண ராவ்க்கு, இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும் சிறையில் நடந்த இதே போன்ற சில முறைகேடுகளையும், டி.ஐ.ஜி., ரூபா அம்பலப்படுத்தினார்.
கடந்த ஆகஸ்டில் புகாரில் சிக்கிய டி.ஜி.பி. சத்யநாராயண ராவ், ஒய்வு பெற்று விட்டார். அவர் டி.ஐ.ஜி.ரூபா மீது ரூ. 20 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு வரும் டிசம்பர் 12-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
இது குறித்து டி.ஐ.ஜி. ரூபா தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிந்துள்ளார். அதில் அவர், “என் புகார் உண்மையானது. எந்த ஒரு அவதூறு வழக்குக்கும் பயப்படாமல் நான் வழக்கை எதிர்கொள்வேன்” எனத் தெரிவித்துள்ளார்.