சென்னை: சென்னை வேப்பேரி அருகே பூந்தமல்லி நெடுஞ்சாலையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்று திறனாளிகள் போராட்டம் நடத்தினர். சாலையில் அமர்ந்து போராட்டங்களை நடத்தியதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தமிழக அரசின் துறைகளில், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் 4 சதவீத இட ஒதுக்கீட்டில், ஒரு சதவீதம் பார்வையற்றவர்களுக்கு ஒதுக்க வேண்டும், டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற பார்வையற்றவர்களுக்கு உடனடியாக ஆசிரியர்கள் பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி,பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாற்றுதிறனாளிகளின் போராட்டம், 13ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. கியது. அன்றைய தினம் வள்ளுவர் கோட்டம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, காவல்துறையினர் அவர்களைக் கைது செய்து, தனியார் மண்டபத்தில் அடைத்தனர். பின்னர், அவர்களை கிளாம்பாக்கம் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு பேருந்துகள் மூலம் அனுப்பி வைத்தனர்.
பின்னர், மாற்றுத்திறனாளிகள் ஆணையத்தை முற்றுகையிட்டு நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போதும், காவல்துறையினர் மாற்றுத்திறனாளிகளைக் கைது செய்து, அவர்கள் செல்ல வேண்டிய ஊர்களுக்கு பேருந்துகளில் அனுப்பி வைத்தனர். நேற்று, கோடம்பாக்கம் மேம்பாலத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள், மேம்பால சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, உடனடியாக தமிழ்நாடு முதலமைச்சர் எங்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் எனத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், மாற்றுத்திறனாளிகள் உடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை சாலையில் இருந்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மேலும், மாநகர அரசுப் பேருந்துகளில் அவர்களை ஏற்றி வலுக்கட்டாயமாக அழைத்துக் கொண்டு, தனியார் மண்டபங்களில் அடைக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இந்த நிலையில், இன்று சென்னை வேப்பேரி பகுதியில், காவல்துறை ஆணையர் அலுவலகம் அருகே பூந்தமல்லி சாலையில் அமர்ந்தும், உருண்டும் மாற்றுத் திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்த பகுதியில் சுமார் அரை மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, காவல்துறையினர் விரைந்து வந்து அவர்களை குண்டுகட்டாக அகற்றி, போக்குவரத்தை சரி செய்தனர்.
மாற்றுத்திறானளிகளின் தொடர் போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.