பெய்ஜிங்
அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட எயிட்ஸ், பற்றிக் காய்ச்சல் உள்ளிட்ட நோய்களுக்காக, உலக நாடுகள் அந்நாட்டிடம் இழப்பீடு கேட்டோமா என சீனா பதிலடி கொடுத்துள்ளது.
அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை 43000 த்தை நெருங்க உள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் கொரோனாவை திட்டமிட்டே சீனா உலகம் முழுதும் பரப்பியது, அதற்கு இழப்பீடு தர வேண்டும் எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் கெங் ஷூவாங் கருத்து தெரிவித்துள்ளார்.
“1981 ஆம் ஆண்டு உயிர்க்கொல்லி நோயான எயிட்ஸ் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்காக உலக மக்கள் அந்நாட்டை பொறுப்பேற்குமாறு கூறினோமா?
2009 ஆம் ஆண்டு ஹெச்1என்1 எனப்படும் பன்றிக் காய்ச்சல் அமெரிக்காவில் இருந்து 214 நாடுகளுக்குப் பரவியது. அதனால் 2 லட்சம் மக்கள் பலியானார்கள். அதற்காக அந்நாட்டை குற்றம் சாட்டி இழப்பீடு கேட்டோமா?
கொரோனாத் தொற்று தொடர்பாக சீனா இதுவரை வெளிப்படையாகவே இருந்து வருகிறது. எனவே அமெரிக்கா அடிப்படை ஆதாரமின்றி பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்” என ஷூவாங் அதிரடியான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
முன்னதாக கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு செய்வதற்காக அமெரிக்க குழுவை வூஹானில் அனுமதிக்க வேண்டும் என டிரம்ப் கேட்டதற்கு சீனா கடும் மறுப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.