சென்னை,

ரசியலுக்கு வருவதாக கூறிக்கொண்டிருக்கும் கமலஹாசன் தமிழக அரசுக்கு எதிராக டுவிட்டரில் கருத்துக்களை பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் நேற்று டுவிட் செய்த கமல்,  ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம்தான். கண்டுபிடித்தபின்,அதை நிரூபிக்காமல் போவதும் குற்றம்தானே. ஆராய்ச்சி மணி அடித்தாயிற்று. குற்றவாளிகள் நாடாளக்கூடாது என்று பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார், கமல் கற்பனை உலகில் வாழ்ந்து வருகிறார், அவருக்கு இப்போதுதான் முதுகெலும்பு முளைத்துள்ளதா  என்று கடுமையாக சாடினார்.

இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமாரிடம், கமலின் டுவிட் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த அமைச்சர், கமலஹாசன் கற்பனை உலகில் வாழ்ந்து வருகிறார். குற்றச்சாட்டுகளை அவர்   நிரூபிக்காவிடில் கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது என்று எச்சரிக்கை விடுத்தார்.

அரசு மீதுள்ள  அரசியல் காழ்புணர்ச்சி காரணமாகவே தமிழக அரசின் மீது கமல் தொடர்ந்த குற்றம் சுமத்தி வருகிறார் என்றார்.

மேலும்,  அரசு தவறு செய்தால் அதை ஜனநாயக ரீதியில் சுட்டிக்காட்டலாம். நடிகர் கமல் கூறுவது போல் ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தால் நேரடியாக புகார் அளிக்கலாம். அல்லது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடலாம்.  அதைவிட்டுவிட்டு ஆராய்ச்சி மணி அடிக்கச் சொல்லி டுவிட் செய்துள்ளார்.

ஆராய்ச்சி மனி அடிக்க இங்கு, மன்னராட்சியா நடக்குது? என கேள்வி எழுப்பிய அமைச்சர், மழை பெய்தால் எப்படி நரியின் சாயம் வெளுத்து விடுமோ; அதுபோல இவருடைய சாயமும் விரைவில்  வெளுத்துவிடும். கட்சியை ஆரம்பிக்கிறேன் என்று சொல்லிவிட்டு தொண்டர்களிடம் ரூ.30 கோடி கேட்ட ஒரே ஆள் இவர் தான் என்றார்.

அம்மா இருந்தபோது அமைதியாக இருந்தவர், தனது படப்பிரிச்சினையின்போது, நாட்டை விட்டு ஓடுவேன் என்று சொன்ன கமலுக்கு,   இப்போது முதுகெலும்பு வந்துவிட்டதா? என்றார்.

மேலும், கடந்த காலத்தில் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தில் வரும் கல்யாணக்குமார் கதாபாத்திரம் போல், கமலின் கேரக்டர் இருக்கிறது என்ற அமைச்சர்,  நிகழ்காலத்தில் ‘குணா’ கமல் கேரக்டர் எனக்கு ஞாபகம் வருகிறது. அவர் கற்பனை உலகில் சஞ்சரித்துக்கொண்டு இருக்கிறார்.

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.