பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபல நடிகை ஷெஃபாலி ஜரிவாலா (42) வெள்ளியன்று இரவு மாரடைப்பால் மரணமடைந்தார்.

அவரது இந்த திடீர் மறைவு திரையுலகினரை மட்டுமன்றி அவரது ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்த மரணம் தொடர்பாக மும்பை போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், அவரது பிரேதப் பரிசோதனை அறிக்கைகள் இதுவரை வெளியாக வில்லை.

அதேவேளையில், வயது முதிர்வை தவிர்க்க ஷெஃபாலி ஜரிவாலா வயது எதிர்ப்பு மருந்துகளை அதிகளவில் உட்கொண்டதாகவும் அதனால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சுமார் 8 ஆண்டுகளாக அவர் இந்த மருந்துகளை எடுத்துக் கொள்வதாகவும், ஜூன் 27 அன்று, குடும்பத்தினர் ஒரு பூஜையை ஏற்பாடு செய்திருந்ததன் காரணமாக ஷெஃபாலி நாள் முழுவதும் உண்ணாவிரதம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இருந்தபோதும் அன்று மதியம் அவர் வயது எதிர்ப்பு ஊசி போட்டுக்கொண்டதை அடுத்து இரவு சுமார் 11 மணியளவில் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார்.

இதையடுத்து அவரை மும்பையில் உள்ள கூப்பர் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றதில் அவர் மாரடைப்பால் இறந்ததாகக் கூறப்பட்டது.

இந்த நிலையில், அவர் பயன்படுத்திய வயது எதிர்ப்பு மருந்துகளே அவரது மரணத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

வயது எதிர்ப்பு மருந்துகள் உடலில் இருதய (இதய நோய்), சிறுநீரகம் மற்றும் வளர்சிதை மாற்றம் ஆகிய தாக்கத்தை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இதை CKM நோய்க்குறி என்றும் குறிப்பிடுகின்றனர்.

நாம் நமது வாழ்க்கை முறையில் மாற்றங்களைச் செய்யும்போது, ​​அது நம் உடலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைக் கணிப்பது கடினம் என்றும் மேற்கத்திய கலாச்சாரத்தின் தாக்கத்தை அடுத்து இந்தியர்களும் வயது எதிர்ப்பு, அழகு, எடை குறைத்தல், உடற்பயிற்சி கூடம் போன்ற இடங்களில் இந்த மருந்துகளை பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது.

மேற்கத்திய உலகில் இது குறித்து நிறைய ஆராய்ச்சிகள் உள்ளதாகவும் ஆனால் இந்தியர்களிடையே இது குறித்து கிட்டத்தட்ட எந்த ஆராய்ச்சியும் இல்லை என்றும் கூறும் மருத்துவர்கள் இந்த மருந்துகள் பல நேரங்களில் தீங்கு விளைவிப்பதை கண்கூடாகப் பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.