ஹைதராபாத்
நடிகை ரோஜா தனது தொகுதியான நகரியில் சமூகவிலகலை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கொரோனாத் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுதும் மே 3 வரை ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. சமூக விலகலை அனைவரும் கடைபிடிக்க அரசும் வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் நகரி சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும், நடிகையுமான ரோஜா குடிநீர்த் திட்டத்தை தொடங்கி வைக்கும் நிகழ்வில் பலருடன் பங்கேற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குடிநீர்த் திட்டத்தை செயல்படுத்த ரோஜா செல்லும்போது வழியின் இருபுறமும் அப்பகுதி மக்கள் வரிசையாக நின்று அவரை மலர்தூவி வரவேற்கின்றனர். இவ்வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
முகத்தில் மாஸ்க் அணிந்து வரும் ரோஜாவை மக்கள் பூத்தூவி, கைதட்டி வரவேற்கின்றனர். அதனை ஏற்றுக்கொண்ட அவர் கிணற்றருகே சென்று பூஜையில் பங்கேற்று, குடிநீர்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிவிட்டு வருகிறார்.
இது குறித்து அப்பகுதி மக்கள், “நெருக்கடியான சூழலில் மக்களுக்கு நலத்திட்டங்களை செய்ய வந்ததை பாராட்டும் விதமாக அப்படி செய்தோம்” என்றனர். ஆனால் பலரும் இதனை குறை கூறி வருகின்றனர்.
தொடக்கத்தில் தெலுங்கு தேசம் கட்சியிலிருந்த ரோஜா அதிலிருந்து விலகி ஒய்எஸ்ஆர் கட்சியில் சேர்ந்தார். தற்போது நகரி சட்டமன்ற உறுப்பினரான அவர் கட்சியின் மகளிர் அணித் தலைவராகவும் உள்ளார்.