டில்லி
பிரசாந்த் கிஷோர் சரக்கு விமானத்தில் கொல்கத்தா சென்றதாக எழுந்து புகாரையொட்டி கடும் சர்ச்சை எழுந்துள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாகத் திட்டங்களை வகுத்து மோடியைப் பிரதமர் ஆக்கியதில் பிரசாந்த் கிஷோருக்கு பெரும் பங்கு உள்ளது. அதன் பிறகு 2018 ஆம் ஆண்டு நடந்த பீகார் சட்டப்பேரவை தேர்தலில் நிதிஷ்குமாருக்கு ஆதரவாகத் திட்டங்கள் தீட்டி அவரை வெற்றி பெறச் செய்தார். அவருக்கு நிதிஷ்குமார் தனது ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் பதவியை வழங்கினார்.
முதல்வர் நிதிஷ்குமாருக்கும் பிரசாந்த் கிஷோருக்கும் கருத்து மோதல் ஏற்பட்டு அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது கடும் சர்ச்சையைக் கிளப்பியது. அதன் பிறகு அரசியல் கட்சியில் சேராமல் விலகி இருந்த பிரசாந்த் கிஷோர் திமுக மற்றும் திருணாமுல் காங்கிரஸ் கட்சிகளுக்குச் சட்டப்பேரவை தேர்தலுக்கான திட்டங்களை வகுத்துத் தரும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் பயணிகள் விமான போக்குவரத்து முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் அத்தியாவசிய பொருட்கள் போக்குவரத்துக்காகச் சரக்கு விமானங்கள் மட்டும் இயக்கப்படுகின்றன. அத்தகைய ஒரு சரக்கு விமானத்தில் பிரசாண்ட் கிஷோர் சமீபத்தில் கொல்கத்தாவுக்குச் சென்று வந்ததாக பாஜக தலைவர் நிகில் ஆனந்த் குற்றம் சாட்டி உள்ளார். இது கடும் சர்ச்சையை உண்டாக்கி உள்ளது.
நிகில் ஆனந்த், “பிரசாந்த் கிஷோர் அரசு மற்றும் விமானத் துறை அதிகாரியோ அமைச்சரோ கிடையாது அவ்வாறு இருக்க அவர் அனுமதி இன்றி எவ்வாறு விமானப் பயணம் செய்தார்? நான் இது குறித்து விமான நிலைய ஆணையம் மற்றும் மத்திய விமானத் துறை அமைச்சகத்திடம் புகார் அளிக்க உள்ளேன். விரைவில் மேற்கு வங்க மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளதால் பிரசாந்த் கிஷோர் கொல்கத்தா வந்து ஆலோசனை நடத்தி உள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கு பிரசாந்த் கிஷோர், ”அனைத்து விமான செயல்பாடுகளும் மத்திய அரசின் விமான இயக்குநரகம் நடத்தி வருகிறது. தற்போது பாஜக ஆட்சி நடைபெறும் நேரத்தில் நான் விமானப் பயணம் எவ்வாறு செய்ய முடியும்? தற்போது நான் சாதாரணமானவன். என் மீதான குற்றச்சாட்டை பாஜகவினர் நிரூபித்ஹ்டல் நான் மன்னிப்பு கேட்கத் தயார். அப்படி இல்லை எனில் அவர்கள் மன்னிப்பு கேட்பார்களா?” எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.