டெல்லி: 23 வருடங்களாக அவர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பு வகித்து வந்த சோனியாகாந்தி, இன்று தன்னிடம் இருந்த பொறுப்பை, தேர்தலில் வெற்றி பெற்று கட்சி தலைவராக பொறுப்பேற்றுள்ள மல்லிகார்ஜுன கார்காவிடம் ஒப்படைத்தார். இதைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசும்போது, எனது கடமையை என்னால் முடிந்தவரை சிறப்பாக செய்தேன், தற்போது நிம்மதியாக உணர்கிறேன் என்று தெரிவித்துள்ளார்
காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட மல்லிகார்ஜுன கார்கே டெல்லியில் உள்ள கட்சி அலுவலகத்தில் புதன்கிழமை தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். அந்த நிகழ்வில் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக இருந்த சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில், கட்சி தலைமை பொறுப்பை கார்கேவுக்கு மாற்றிக் கொடுத்த சோனியாகாந்தி, நிகழ்ச்சியில் பேசும்போது, “நான் மிகவும் நிம்மதியாக இன்று உணர்கிறேன் . நான் ஏன் இவ்வாறு சொல்கிறேன் என்று விளக்குகிறேன். உங்களின் அன்பையும், நீங்கள் எனக்கு அளித்த மரியாதையும் நான் என்னுடைய கடைசி மூச்சு இருக்கும் வரை மதிப்பேன். ஆனால்
அந்த மரியாதை மிகப்பெரிய பொறுப்பு வாய்ந்தது. என்னால் முடிந்த அளவுக்கு எனது பணியினை நான் சிறப்பாக செய்தேன். என் தோல்களின் மேல் ஒரு சுமை இருந்தது. அந்த பொறுப்புகளில் இருந்து இன்று நான் விடுபடுகிறேன். அதனால் இயல்பாகவே நான் நிம்மதியாக உணருகிறேன். காங்கிரஸ் கட்சியின் தலைமை என்பது மிகப் பெரிய பொறுப்பு. இனி இந்த பொறுப்பு மல்லிகார்ஜுன கார்கேவினுடையது. காங்கிரஸ் கட்சி பல சவால்களை சந்தித்துள்ளது. அந்தச் சவால்களை நாம் எவ்வாறு எதிர்கொண்டோம். முழு பலத்துடன் ஒற்றுமையாக நாம் முன்னேறி வெற்றி பெற்றோம். தற்போது நமது முன்னால் நாட்டின் ஜனநாயக மதிப்புகளுக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல் மிகப் பெரிய சவால் உள்ளது” என்று தெரிவித்தார்.
இதையடுத்து பேசிய புதிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “சோனியா காந்தி எப்போதும் உண்மையானவராக இருந்தார். அவர் நமக்கு காட்டிய முன்மாதிரி சார்புகளற்றது. அவரது தலைமையின் கீழ் இரண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுகள் அமைந்தன. அந்த அரசு ஆட்சியில் இருந்தபோது, தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம், உணவுப் பாதுகாப்பு சட்டம், தகவல் அறியும் உரிமைச் சட்டம் போன்றவை அமல்படுத்தப்பட்டன” என்றார்.