பெங்களூரு: தான் உண்ணாவிரதம் இருந்து உயிர்விடப்போவதாக சொன்னதும்தான் காவிரி விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட்டதாக முன்னாள் பிரதமர் தேவகவுடா தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆரம்பத்தில் இதை ஏற்றுக்கொண்ட மத்திய பாஜக அரசு, பிறகு இதை எதிர்த்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இப்படி மத்திய அரசு மாறியதற்குக் காரணம், தனது உண்ணாவிரதம்தான் என்று தேவகவுடா தெரிவித்துள்ளார். கர்நாடக ஒக்கலிகர் சங்கம் சார்பில் மரிகவுடா நூற்றாண்டு விழா பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தேவே கவுடா பேசியதாவது:
’’கர்நாடகாவில் இருக்கும் இரண்டு நதிகளும் விவாதத்தில் சிக்கி இருக்கின்றன. நமக்கு குடிநீருக்கு பிரச்சினையாக இருக்கும்போது, தமிழகத்திற்கு விவசாயத்திற்கு தண்ணீரை திறந்துவிடும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது சரியல்ல.
மக்கள் வாழ தண்ணீர் மற்றும் காற்று அவசியம் தேவை. உச்சநீதிமன்றத்தில் உள்ள மூன்று நீதிபதிகளுக்கு இதுபற்றி தெரியாதா? மக்களின் வேதனை அவர்களுக்கு புரியவில்லையா?. காவிரி பிரச்சினை இன்னும் முடியவில்லை. தற்போதைக்கு நம் தலை மீது தொங்கியிருந்த கத்தி விலகியுள்ளது. அவ்வளவுதான்.
இந்த பிரச்சினையில் தைரியமாக முடிவு எடுத்து உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினேன். உடனே பிரதமர் அலுவலகத்தில் இருந்து எனக்கு தொலைபேசியில் பேசினர். அப்போது நான், “மூன்று நாட்கள் உண்ணாவிரதம் இருக்கிறேன். அதன் பிறகு பிரதமரே வந்து எனது பூத உடலுக்கு அஞ்சலி செலுத்தட்டும்” என்று கூறினேன். அதன் பிறகு பிரதமர் உடனடியாக காவிரி பிரச்சினையில் தலையிட்டார்’’என்று தேவகவுடா பேசினார்.