இஸ்ரேலுக்கு சென்னை துறைமுகம் வழியாக இந்தியா ஆயுதங்களை அனுப்பியதாக அல் ஜசீரா செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

உலகின் தலைசிறந்த ராணுவத்தையும் ராணுவ தளவாடங்களையும் வைத்திருக்கும் இஸ்ரேல் நாட்டின் மீது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஹமாஸ் படையினர் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலின் இரும்பு டூம் தகர்க்கப்பட்டது.

இதனையடுத்து ஹமாஸ் படையினர் மீதும் பாலஸ்தீனியர்கள் மீதும் கடந்த எட்டு மாதங்களுக்கு மேலாக நிகழ்த்தப்பட்டு வரும் தாக்குதலில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.

இஸ்ரேலின் இந்த கொலைவெறி தாக்குதலை இனப்படுகொலை என்று ஐ.நா. உள்ளிட்ட பல்வேறு சர்வதேச நாடுகள் கண்டித்தபோதிலும் பாலஸ்தீனத்தின் மீதான தாக்குதலை இஸ்ரேல் தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில், இஸ்ரேலுக்கு இந்தியா ராணுவ தளவாடங்களை அனுப்பி வைத்ததாக அல் ஜசீரா நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

மே மாதம் இரண்டாவது வாரத்தில் சென்னையில் இருந்து ஸ்பெயின் துறைமுகத்தை நோக்கி வந்த ‘போர்க்கும்’ என்ற சரக்கு கப்பலில் ராக்கெட்டுகள், வெடிபொருட்கள் உள்ளிட்ட ராணுவ தளவாடங்கள் இருப்பதாக அந்நாட்டு இடதுசாரி அமைப்பினர் குற்றம்சாட்டினர்.

இனப்படுகொலை நடத்தி வரும் இஸ்ரேலுக்கு ராணுவ தளவாடங்களை ஏற்றிச் செல்லும் இந்த கப்பலை ஸ்பெயின் அனுமதிக்கும் பட்சத்தில் இனப்படுகொலைக்கு அதுவும் துணை போவதாகவே அமையும் என்று கூறிய போராட்டக்காரர்கள்.

அந்த கப்பலை சிறைபிடித்து அதில் உள்ள பொருட்களை ஆய்வு செய்யவேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதனையடுத்து அந்த கப்பல் ஸ்பெயின் துறைமுகத்திற்கு செல்லும் திட்டத்தை கைவிட்டு ஸ்லோவேனிய நாட்டை நோக்கி நகர்ந்ததாக அல் ஜசீரா கூறியுள்ளது.

20 டன்கள் ராக்கெட் என்ஜின்கள், 12.5 டன்கள் வெடிக்கும் திறன் கொண்ட ராக்கெட்டுகள், 1,500 கிலோ வெடிபொருட்கள் மற்றும் 740 கிலோ பீரங்கிகளுக்கான உந்துபொருட்களுடன் ஏப்ரல் 2-ம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்டு, செங்கடல் வழியாக செல்வதைத் தவிர்த்து ஆப்பிரிக்காவைச் சுற்றி இஸ்ரேலின் Ashdod துறைமுகத்திற்கு செல்ல திட்டமிடப்பட்டிருந்தது.

அதேபோல், சென்னை துறைமுகத்தில் இருந்து வந்த மற்றொரு சரக்குக் கப்பலான Marianne Danica, இஸ்ரேலுக்கு இராணுவ பொருட்களை ஏற்றிச் செல்ல முயன்றதாக தெரிவித்து மே 21 அன்று ஸ்பெயின் அரசு அனுமதி மறுத்தது.

காசா-வில் அமைதி திரும்ப போரைக் கைவிடவேண்டும் என்று இஸ்ரேலை வலியுறுத்திவரும் இந்தியா மீது கடல் கண்காணிப்பு தளங்கள் மூலம் பெறப்பட்ட தகவலை அடிப்படையாகக் கொண்டு அல் ஜசீரா வெளியிட்டிருக்கும் இந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதேவேளையில் இஸ்ரேலுக்கு இந்தியாவில் இருந்து ராணுவ தளவாடங்கள் சென்றதாக அல் ஜசீரா வெளியிட்டுள்ள இந்த செய்தி குறித்து இந்திய அரசு இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.