இன்னோவா காரை கொடுத்ததே ஆடி காருக்கு அடி போடத்தான் என்று கூறுவது பொய் என்று நாஞ்சில் சம்பத் ஆவேசமாக தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த நாஞ்சில் சம்பத் தெரிவித்ததாவது:
“மார்ச் 15-ஆம் தேதி தினகரன், புதிய கட்சியை தொடங்கியுள்ளார். அதில் அண்ணாவும், திராவிடமும் தூக்கி எறியப்பட்டுள்ளது. தத்துவத்தை மையமாக வைத்தவன்தான் தலைவன். ஆனால் இங்கு தத்துவமே தகராறாகிவிட்டது.
இதுகுறித்து நான் பேச முனைந்தபோதெல்லாம் தினகரன் என் போன் அழைப்பை ஏற்றதே இல்லை. அண்ணாவும் திராவிடமும் என் உள்ளத்தில் இருக்கிற ஒளி. அந்த ஒளியை மறைத்து வைத்துவிட்டு என்னை பேச சொன்னால் என்னால் எதையும் பேச முடியாது. அம்மா அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரை தினகரன் வைத்திருக்கலாமே.
அவரை விட்டு வெளியே வந்ததில் மகிழ்ச்சியாகதான் இருக்கிறேன். டிடிவி தினகரன் என்ற தனி மனிதன் மீது எனக்கு எந்தவித கோபம் இல்லை. அவர் தொடங்கிய அமைப்பு.. அதன் பெயர்தான் எனக்கு பிடிக்கவில்லை.
திராவிடம் என்ற கான்செப்டை துணிச்சலாக எடுத்து விட்டார். அதிமுகவும், டிடிவி தினகரன் அணியும் இணைந்தாலும் நான் அங்கு செல்லமாட்டேன். அரசியலுக்கே நான் முழுக்கு போட்டுவிட்டேன். நான் வேறு கட்சியில் சேர்ந்துவிடுவேன் என்று குரைப்பவர்கள் குரைக்கட்டும். நான் இனிமேல் யாரிடமும் சென்று நிற்கப்போவதில்லை.
இன்னோவா காரை அவங்க கொடுத்தாங்க, நான் வாங்கிக் கொண்டேன். ஆடி காருக்கு அடி போடுகிறேன் என்று கூறுவதெல்லாம் பொய். கார் பயணமே சுமையானது , ரயில் பயணம்தான் எளிதானது. ரசனையானது” என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.