தென்காசி:
திமுக எம்எல்ஏ பூங்கோந்தை ஆலடி அருகே கொரோனாவில் இறந்தவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்ததாக சமுக வலைதளங்களில் வைரலானது. விசாரணையில், அது பொய்யான தகவல் என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
கொரோனாவால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய தி.மு.க எம்.எல்.ஏ பூங்கோதை ஆலடி அருணா எதிர்ப்பு தெரிவித்ததாக சமூக ஊடகங்களில் ஒரு தகவல் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
சென்னையில் மருத்துவர்கள் இருவர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த போது, அவர்கள் உடலை அடக்கம் செய்ய சுடுகாடு அமைந்துள்ள பகுதியைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அண்ணாநகர் திருவேலங்காடு சுடுகாட்டில் அடக்கம் செய்ய முயன்றபோது பொது மக்கள் தாக்குதல் நடத்தினர். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், நெல்லை மாவட்டம் ஆலங்குளம் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ-வும் மருத்துவ ருமான பூங்கோதை ஆலடி அருணாவும் கொரோனா பாதிப்பில் உயிரிழந்தவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்ததாக அவரது படத்துடன் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
அதில், கொரனோவால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய திமுக MLA பூங்கோதை எதிர்ப்பு. ஏன்டா நேற்று தான் சுடலை ஒன்றிணைவோம் மயிரை புடுங்குவோம் சொன்னாரு” என்று குறிப்பிட்டுள்ளனர். என்பதை ஒருவர் கடந்த 21ந்தேதி அன்று முகநூலில் பகிர்ந்துள்ளார். இது வைரலாக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், இந்த தகவல் பொய் என்பது நிரூபிக்கப்பட்டு உள்ளது. சம்பவத்தன்று, கொரோனா பாதித்த பகுதிக்கு சென்று வந்தவர்களை ஆலங்குளம் பகுதியில் உள்ள கல்லூரியில் தங்க வைக்க மாவட்ட நிர்வாகம் முயன்றதாகவும் இதற்கு பொது மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே, பொது மக்கள் சார்பில் தொகுதி எம்.எல்.ஏ பூங்கோதை ஆலடி அருணா பேசினார் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள பூங்கோதை ஆலடி அருணா, “நெல்லை மாவட்டத்தில் கொரோனா தொற்று உள்ள பகுதியாக அறிவிக்கப்பட்ட மேலப்பாளையத்தில் நடந்த துக்க நிகழ்வில் பங்கேற்க தென்காசி மாவட்டம் கடையநல்லூரிலிருந்து ஒன்பது பேர் சென்றுள்ளனர். அவர்கள் மீண்டும் கடையநல்லூர் திரும்பியபோது அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிக்கு எந்த அனுமதியும் இன்றி சென்று வந்ததால் அவர்களை தனிமைப்படுத்த மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்தது. கடையநல்லூரிலேயே அவர்களை தங்க வைக்காமல், ஆலங்குளத்தில் உள்ள கல்லூரி ஒன்றுக்கு அழைத்துவந்தனர். இதை அறிந்த அந்த பகுதி மக்கள் கடையநல்லூரில் இருந்து ஏன் அவர்களை இங்கே அழைத்து வந்தீர்கள், கடையநல்லூரிலேயே தங்க வைக்க வேண்டியதுதானே என்று போராட்டம் நடத்தினர்.
தகவல் அறிந்து சென்று மக்களை சமாதானம் செய்து அதிகாரிகளிடம் பேசினேன். அப்போது கடையநல்லூரில் தனிமைப்படுத்தும் வசதி இல்லாததால் இங்கே அழைத்து வந்தீர்களா என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘அனுமதி பெறாமல் திருநெல்வேலி சென்று வந்துள்ளனர். அவர்களை கடையநல்லூரிலேயே தனிமைப்படுத்தினால் அவர்களுக்கு தாங்கள் செய்த தவறு தெரியாது. அவர்களுக்கு புத்திபுகட்டும் வகையில் ஆலங்குளம் கல்லூரியில் தங்க வைக்கிறோம்’ என்றனர்.
கடையநல்லூரில் தனிமைப்படுத்த இடம் இல்லை, வசதி இல்லை என்று கூறியிருந்தால் ஆலங்குளம் கல்லூரியில் தங்க வைக்க எந்த எதிர்ப்பும் வந்திருக்காது.
மருத்துவர் என்ற முறையில், இவர்கள் இங்கேயே தங்கினாலும் எந்த பிரச்னையும் இல்லை என்பது எனக்கும் தெரியும். மக்களை சமாதானம் செய்திருப்பேன்.
ஆனால், ஆலங்குளத்தில் ஒருவருக்கு கூட கொரோனா இல்லை. கொரோனா தொற்று இல்லாத பகுதியாக ஆலங்குளம் உள்ளது.
மக்களுக்கு புத்தி புகட்ட வேண்டும் என்பதற்காக இதை செய்தேன் என்று மாவட்ட நிர்வாகம் அலட்சியமாக கூறியதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தேன்.
ஆலங்குளம் கல்லூரி முன்பு திண்டு நின்ற கிராம மக்கள் கொரோனா பற்றிய விழிப்புணர்வு இன்றி, வாழ வழியின்றி அச்சத்தில் உள்ளனர். அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டவர்களை அழைத்துச் செல்கின்றீர்களா, அல்லது அவர்களை நாங்கள் வெளியே இழுத்து வரட்டுமா என்று கேட்கின்றனர். வேறு பிரச்னை வந்துவிடக் கூடாது என்பதற்காக மக்களுக்கு ஆதரவாக பேசினேன்.
ஆனால், உண்மை என்ன என்று தெரியாமல் சமூக ஊடகங்களில் பல வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக போலீசில் புகாரும் அளித்துள்ளேன்” என்றார்.
இந்த தகவல் திரித்து, வெளியிடப்பட்டு, வைலாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
credit: https://tamil.factcrescendo.com/