சென்னை
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் மீது மாணவிகள் பலரும் சமூக வலைத்தளங்களில் பகிரங்க பாலியல் தொல்லை புகார் தெரிவித்துள்ளனர். பலரும் இது குறித்து புகார்கள் அளித்தும் கூட பி.எஸ்.பி.பி. பள்ளி நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதும் மாணவிகள் குற்றச்சாட்டு ஆகும்.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் வெளியான இந்த குற்றச்சாட்டை முன்வைத்து திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி ஒரு டிவிட்டர் பதிவை வெளியிட்டிருந்தார். அந்த பதிவில் அவர் புகார் கூறப்பட்ட ஆசிரியர் மீது, கண்டுகொள்ளாத பள்ளி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.
மற்றொரு திமுக மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்க பாண்டியன் தமது டிவிட்டர் பக்கத்தில், ”சென்னை கே.கே.நகர் பி.எஸ்.பி.பி. பள்ளியில் ஆசிரியர் ஒருவரின் பாலியல் தொல்லை தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. அந்த ஆசிரியர் மீது சட்டப்பூர்வமாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காமல் அவரை பள்ளி நிர்வாகம் பாதுகாக்க முயன்றால் மத்திய மாநில கல்வித்துறைகள் இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி ஆசிரியர் மீதும் பள்ளி நிர்வாகத்தின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
தற்போது திமுகவின் மக்களவை உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன் ”இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இந்த நிகழ்வுக்கு தமது டிவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ள தயாநிதி மாறன், சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒரு பெற்றோராகத் தாம் வலியுறுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.