டில்லி:

ரக்கு சேவை வரி(ஜிஎஸ்டி)யின் கீழ் இயற்கை எரிவாயுவை கொண்டுவர வேண்டும் என மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வலியுறுத்தியுள்ளார். அன்றாடம் பயன்படுத்தும் சமையல் எரிவாயுவும் இதில் சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.

டில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தர்மேந்திர பிரதான் கலந்துகொண்டார். அப்போது அவர், “காற்று மாசை அதிகம் ஏற்படுத்தி சுற்றுச்சூழலை கெடுக்கும் எரிபொருளான நிலக்கரிக்கு 5 சதவீத சரக்கு மற்றும் சேவை வரி வசூலிக்கப்படுகிறது. அதே நேரத்தில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத எரிபொருளான கேஸ்சிலிண்டர்களில் நிரப்பப்படும் இயற்கை எரிவாயுவை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரவில்லை.

பெட்ரோலிய அமைச்சகம் சார்பில் அருண் ஜெட்லிக்கு கடிதம் எழுதப்பட்டது. இயற்கை எரிவாயுவை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டது.

தற்போது இயற்கை எரிவாயுவுக்கு 5 முதல் 12 சதவீதம் வாட்வரி விதிக்கப்படுகிறது. இதுதவிர உற்பத்தி வரி தனியாக வசூலிக்கப்படுகிறது. கடந்த ஜூலை 1ம் தேதி நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது வாட்வரி, உற்பத்தி வரி, விற்பனைவரி, சேவை வரி போன்ற பல்வேறு  மறைமுக வரிகள் நீக்கப்பட்டுள்ளன. ஆனாலும் கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல், இயற்கை எரிவாயு,  விமான எரிபொருள் ஆகியவை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரப்படவில்லை. அவற்றுக்கு பழைய முறையில் உற்பத்தி வரி மற்றும் வாட் வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. இது நிறுத்தப்பட வேண்டும்.  இதற்கு பதிலாக இவற்றுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட வேண்டும்” என்று அமைச்சர் பேசினார்.