சென்னை: அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று 9வது நாளாக ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பு தனித்தனியாக தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், சூது கவ்வினாலும் தர்மம் மறுபடியும் வெல்லும் ஓ.பன்னீர்செல்வம் டிவிட் பதிவிட்டுள்ளார். இதற்கிடையில் பொதுக்குழுவில் பங்கேற்பவர்களுக்கான பாஸ் வழங்கும் பணிகளும் ஜரூராக நடைபெற்று வருகின்றன.
ஒற்றைத்தலைமை விவகாரம் அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. நாளை அதிமுக பொதுக்குழு கூட உள்ள நிலையல், இரு தரப்பினரும் இரவு பகல் பாராது ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், நேற்று இரவு ஓபிஎஸ் ஆதரவாளரான கேசவன் என்பவர் ஜெயலலிதா சமாதியில் தீக்குளிக்க முயன்றார். இது பரபரப்பை எற்படுத்தியது.
இதுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம், சர்வாதிகார போக்கிற்கு எதிராக கேசவன் தீக்குளிக்க முயன்றது வேதனை அளிக்கிறது. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மறுபடியும் வெல்லும் என தெரிவித்துள்ளார்.
ஒற்றை தலைமை விவகாரத்தில், எடப்பாடி பழனிசாமிக்கு பொதுக்குழு உறுப்பினர்களிடையே ஆதரவு அதிகரித்து வரும் நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தனது டிவிட்டர் பக்கத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளது, அவருக்கு வெற்றி வாய்ப்பில்லை என்பதை பிரதிபலித்துள்ளது.
இதற்கிடையில், நாளை நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு பாஸ் வழங்கப்படுகிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பாஸ் வழங்கப்படுகிறது. ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி புகைப்படம் அடங்கிய பாஸ் வழங்கப்படுகிறது.