ன்வந்திரி பகவான் திருக்கோயில், கோயம்புத்தூர் மாவட்டம், ராமநாதபுரத்தில் அமைந்துள்ளது.

மாங்கல்ய சவுபாக்கியத்துக்கு துர்கா தேவிக்கு சுயம்வர புஷ்பாஞ்சலி செய்யப்படுகிறது. பவுர்ணமியன்று, சத்யநாராயண பூஜை வெகு விமர்சையாக திரளான பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.

நவராத்திரி வைபவத்தின் முக்கிய நிகழ்வு சங்கீத உற்சவம் ஆகும். விநாயக சதுர்த்தியன்று 108 கணபதிகளை அலங்காரம் செய்து ஆராதனைகளுக்குப் பின் ஆற்றில் நிமஞ்சனம் செய்யப்படுகிறது.

இத்தலத்தின் முக்கிய பெருவிழா தன்வந்திரி ஜெயந்தி வைபவம் ஆகும். தினசரி நடைபெறும் அன்னதானம் மிகச் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். இந்த அன்னத்தை தன்வந்திரி பகவானின் பிரசாதமாக உட்கொள்வதின் மூலம் எந்த வியாதியும் தம்மை அண்டாது எனவும் உள்ள வியாதிக்கும் இது மருந்தாகும் என முழுமையாக நம்புகின்றனர்.

ஆனி மாதம் அஸ்த நட்சத்திரதன்று கோயில் பிரதிஷ்டை செய்யப்பட்ட நாளாகும். அந்நாளில் ஐயப்பன் விக்ரகத்தை புஷ்பங்களால் மூடப்படும் புஷ்பாஞ்சலி வைபவம் காணக் கிடைக்காத காட்சியாகும். இந்த வைபவத்தைக் காண பக்தர்கள் கூட்டம் அலைமோதும். புகழ்பெற்ற விஜய பொடுவாள் இயற்றிய அஷ்டபதி பாடலை தினந்தோறும் கேட்டு மகிழலாம்.

கோயில் கட்டுமானங்கள் அனைத்தும் கேரள கலாச்சார மரபுபடி அமைக்கப்பட்டுள்ளன. பூஜை முறைகள் கேரள ஆச்சாரப்படி நடைபெறுகின்றன. பொதுவாக கேரள கோயில் பூஜை முறைகள் அர்ச்சனை ஆராதனைகள் மாறுபட்டிருக்கும். நம்பூதிரிகள் கருவறையில் அமர்ந்து யோகமுத்திரைகளுடன் வேத மந்திரங்களை உச்சாடனம் செய்து தெய்வ திருமேனிகளுக்கு உருவேற்றிக் கொண்டிருப்பதால் இறை சக்திக்கு ஆற்றல் கூடிக் கொண்டே இருக்கும். தன்வந்திரி உடல் நலத்திற்குரிய தெய்வமாக இருப்பதால் இங்கு மிருத்யுஞ்ஜய ஹோமம் எனப்படும் ஆயுள் ஹோமம் பிரசித்தி பெற்றதாகும்.

இந்த ஹோமங்கள் எந்த வித ஆர்ப்பாட்டமும் இன்றி அமைதியாக நடப்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். அவரவர் ஜென்ம நட்சத்திரத்தன்று முன்கூட்டியே பதிவு செய்து யாகத்தில் கலந்து கொள்ளலாம்.

உடல் நலத்தில் எந்த பாதிப்பும் வராது பகவானுக்கு பிடித்த பால் பாயசம் நைவேத்தியமாகப் படைக்கின்றனர்.

ஆஞ்சநேயருக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் வடைமாலை சாத்தப்படுகிறது.