‘நயன்தாரா பியாண்ட் தி ஃபேரிடேல்’ என்ற தனது ஆவணப்படத்திற்க்காக ‘நானும் ரௌடி தான்’ படத்தில் வரும் சில காட்சிகள் மற்றும் பாடலை பயன்படுத்த அந்தப்படத்தின் தயாரிப்பாளரான தனுஷிடம் அனுமதி கோரியிருந்தார்.

ஏற்கனவே நயன்தாராவின் திருமண வீடியோவை ஓ.டி.டி. தளத்தில் வெளியிட்ட நெட்ஃ ப்ளிக்ஸ் நிறுவனமே இந்த ஆவணப்படத்தையும் ஓ.டி.டி.யில் வெளியிடப் போவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தனுஷின் அனுமதிக்காக கடந்த 2 ஆண்டுகளாக காத்திருந்த நயன்தாரா ‘நயன்தாரா பியாண்ட் தி ஃபேரிடேல்’ ஆவணப்படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டார்.

அதில் ‘நானும் ரௌடி தான்’ படத்தின் 3 நொடி காட்சிகள் சேர்க்கப்பட்டிருந்தது.

இதையடுத்து தனது சம்மதம் இல்லாமல் படத்தின் காட்சிகளை வெளியிட்ட நயன்தாரா மற்றும் நெட்ஃ ப்ளிக்ஸ் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பினார் தனுஷ்.

24 மணி நேரத்துக்குள் தான் குறிப்பிட்ட காட்சிகளை நீக்க வலியுறுத்திய அவர் அப்படி நீக்காவிட்டால் நயன்தாரா ரூ. 10 கோடி நஷ்டஈடு தரவேண்டும் என்று கூறியிருந்தார்.

ஏற்கனவே ‘நானும் ரௌடி தான்’ படத்தயாரிப்பின் போது தனுஷுக்கு நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறப்படும் நிலையில் தற்போது புதிதாக வெளியான ஆவணப்படத்திற்கு நஷ்டஈடு கேட்டு தனுஷ் நோட்டீஸ் அனுப்பியதை அடுத்து நயன்தாரா தரப்பு அதிர்ச்சி அடைந்தது.

மேலும், கடந்த சில ஆண்டுகளாக அதிகம் கண்டுகொள்ளப்படாமல் ஓரங்கட்டப்பட்டுள்ள நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதியினர் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நடிகர் தனுஷ் மீது பரபரப்பு குற்றச்சாட்டு வைத்து வெளிப்படையான கடிதம் ஒன்றை சமூகவலைத்தளம் மூலம் வெளியிட்டது.

இது நயன்தாரா எதிர்பார்த்த விளைவை ஏற்படுத்தியதா என்பது கேள்விக்குறியாகி உள்ள நிலையில், 24 மணி நேர கெடு முடிந்த நிலையில் நயன்தாரா மீது நடிகர் தனுஷ் என்ன நடவடிக்கை மேற்கொள்ள போகிறார் என்ற எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

தவிர, நயன்தாரா – தனுஷ் இடையிலான இந்த மோதல் விவகாரத்தில் இரண்டு பேருக்கும் ஆதரவாக பல திரை பிரபலங்கள் ஆதரவு குரல் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நானும் ரவுடி தான் : “அடுத்தவர் துன்பத்தில் இன்பம் காண்பவர்” தனுஷை வசைபாடிய நயன்தாரா