திரைப்பட நிகழ்ச்சியில் டி.ராஜேந்தர் பெயரைக் குறிப்பிட மறந்ததற்காக, அவர் காலில் விழுந்து தன்ஷிகா மன்னிப்புக் கேட்டும், தொடர்ந்து வார்த்தைகளால் காயப்படுத்தியதாக நடிகர் விஷால் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் “விழித்திரு”  என்ற தமிழ்   திரைப்படம் வெளியாவதையொட்டி நடைபெற்ற பத்திரிகை யாளர் சந்திப்பில் பேசிய நடிகை தன்ஷிகா, மேடையில் இருந்த நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தர் எனது  பெயரைக் குறிப்பிட மறந்துவிட்டார் என்றார்.

அதைத் தொடர்ந்து பேசிய  டி.ராஜேந்தர், தன்ஷிகா  கபாலியில் நடித்து விட்டதால்  தன்னை யார்? என கேட்டதாக கூறி, தனக்கே உரிய அடுக்குமொழியில் நடிகை தன்ஷிகாவை விமர்சித்து  பேசியதால், விழா மேடையிலேயே, தன்ஷிகா அழுதுள்ளார்.

தன்ஷிகாவெல்லாம் என்னுடைய பெயரை சொல்லியா நான் வாழப்போகிறேன். ஹன்சிகாவை பற்றியே கவலைப் படாதவன் தன்ஷிகாவை பற்றியா கவலைப்பட போகிறேன். மேடை நாகரிகம் என்று ஒன்று உள்ளது என்றார்.

இதையடுத்து ராஜேந்தர் காலில் விழுந்து தன்ஷிகா மன்னிப்பு கோரினார். இந்த தகவல் சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவியது. அதில், தன்ஷிகா,  தனக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள நடிகர் சங்கப் பொதுச்செயலாளரும், தயாரிப்பா ளர் சங்கத் தலைவருமான விஷால், மேடையில் ஒரு நடிகை பேசும்போது ஒருவரது பெயரை மறப்பது என்பது இயல்பானது என்று கூறியுள்ளார்.

ராஜேந்தர் சுட்டிக் காட்டிய பின்னர் தன்ஷிகா அவரது காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட பிறகும், மகளையொத்த வயதுடைய அவரை பெருந்தன்மையாக மன்னித்திருக்கலாம் என்றும், அவரைக் காயப்படுத்தியிருக்கக் கூடாது என்றும் விஷால் தெரிவித்துள்ளார்.

திரையுலகில் ஒரு பெண் நடிகையாவது எத்தனை சிரமம் என்பது அனைவருக்கும் தெரியும் என்றும், தன்ஷிகா வேண்டுமென்றே அவமரியாதை செய்யவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

தன்ஷிகா மன்னிப்பு கேட்டும்கூட தொடர்ந்து காயப்படுத்தும் வகையில் வார்த்தைகளை பயன்படுத்திய ராஜேந்தருக்கு  கண்டனம் தெரிவிப்பதாக விஷால் கூறி உள்ளார்.