சென்னை: ராணுவ ஹெலிகாப்டர் விபத்து குறித்து வதந்தி மற்றும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெல்லிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஹெலிகாப்டரில் வந்தபோது, குன்னூர் அருகே உள்ள காட்டேரி பகுதியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில்,  முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 13 ராணுவத்தினர் உயிரிழந்தனர்.

நாட்டையே உலுக்கிய  இச்சம்பவத்தின் தொடர்ச்சியாக ஹெலிகாப்டர் விபத்து குறித்த பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்கள்  சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதையடுத்து, இந்திய விமானப்படை சார்பில்,   ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், விசாரணை நடைபெற்று விபத்திற்கான உரிய காரணம் அறியும் வரை உயிரிழந்த வீரர்களின் மரியாதை கருதி தேவையற்ற வதந்திகள் பரப்புவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

முப்படைகளின் தளபதி பிபின் ராவத் வெலிங்டன் ராணுவ முகாமுக்கு வருகிறார் என்பதால், மாவட்டம் முழுவதுமே பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டது. அவரது வான் வழி பயணம் என்றாலும், சாலைகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும், தீவிர கண்காணிப்புப்பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், குன்னூரில் ஆய்வு செய்து வந்த டிஜிபி சைலேந்திரபாபு, ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டபோது  உரிய நேரத்தில் தீயணைப்பு மற்றும் காவல்துறைக்கு தகவல் அளித்ததுடன்,  அவர்களை காப்பாற்றி எடுத்துச்செல்ல தங்களது  வீடுகளிலிருந்து போர்வைகள்  வழங்கி உதவினர்.  அவர்களது சேவையை பாராட்டி,  குன்னூர் சார் ஆட்சியர் மற்றும் காவல்துறை சார்பில் கம்பளிகள் வழங்கப்பட்டன.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டிஜிபி சைலேந்திரபாபு,  விபத்து தொடர்பாக கூடுதல் எஸ்பி முத்துமாணிக்கம் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது. இது வரை 26 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது’ என்றார்.

மேலும், குன்னூரில் நடைபெற்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்துச் சம்பவம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை சமூக வலைதளங்களில் பரப்புபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

ஏற்கனவேஹெலிகாப்டர் விபத்தை மையப்படுத்தி பல்வேறு கருத்துக்களை பதிவிட்ட யூ-டியூபர் மாரிதாஸ் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஷிபின் ஆகியோர் கைது செய்யப்பட்டடுள்ளது குறிப்பிடத்தக்கது.