சென்னை

குட்கா அனுமதி வழங்கியதில் ஊழல் நடந்ததாக காவல்துறை டிஜிபி எழுதிய கடிதம் போயஸ் இல்லத்தில் சசிகலாவின் அறையில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் குட்கா விற்பனைக்கு அனுமதி அளித்ததில் ஊழல் நடந்ததாக எழுந்த புகாரில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்த வேண்டும் என திமுக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.   குட்கா உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களால்  லஞ்சம் கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்ததி ஒட்டி வருமான வரித்துறை அளித்த கடிதத்தை டிஜிபி அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு அனுப்பி உள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின் அவருடைய போயஸ் கார்டன் இல்லமான வேத நிலையத்தில்  வருமானவரித்துறையினர் சோதனை இட்டனர்.   அப்போது சசிகலா தங்கி இருந்த அறையில் இந்தக் கடிதம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.   அந்தக் கடிதம் வருமான வரி அதிகாரிகளால் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.    இந்த தகவலை அளித்த நீதிமன்றம் விசாரணையை வரும் 17ஆம் தேதி அன்று ஒத்தி வைத்துள்ளது.

சசிகலா அறையில் கண்டெடுக்கப்பட்ட கடிதம் குறித்து அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு காட்டாமல் மறைக்கப்பட்டிருக்கலாம் என ஊடகங்கள் சந்தேகம் எழுப்பி உள்ளன.