டில்லி:
பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து சென்னை மற்றும் ஆமதாபாத் விமான நிலையங்களின் இயக்குனர்களுக்கு விளக்கம் கேட்டு இந்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் ‘நோட்டீஸ்’ அனுப்பி உள்ளது.
நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களின் தரம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கடந்த 2ந்தேதி மற்றும் 3ந்தேதி விமான போக்கு வரத்து துறை இயக்குனரகம் , ஆய்வு நடத்தியது. இதில், சென்னை மற்றும் அகமதாபாத் விமான நிலையங்களில் குறைபாடுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, முறையாக பாதுகாப்பு விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டியது.
ஏரோட்ரோமின் முக்கியமான பகுதிகள் “கட்டுப்பாட்டாளரின் தேவைகளுக்கு ஏற்ப பராமரிக்கப்படவில்லை “, பல இடங்களில் பாதுகாப்பு குறைபாடு உள்ளது . மேலும், விமான நிலையத்தின் இரண்டாம் நிலை ஓடுபாதையிலும் “கான்கிரீட் ஸ்லாப், திறந்திருந்த நிலையில் காணப்பட்டதாகவும் கூறி உள்ளது.
இந்த நிலையில், சென்னை விமான நிலைய இயக்குனர் சந்திரமவுலி மற்றும் ஆமதாபாத் விமான நிலைய இயக்குனர், மனோஜ் கங்கல் ஆகியோருக்கு, விமான போக்குவரத்து துறை, விளக்கம் கேட்டு ‘நோட்டீஸ்’ அனுப்பியுள்ளது. 15 நாட்களுக்குள் அவர்கள் பதில் அளிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.