டெல்லி: நடிகர் குணால் கம்ரா மீது விமான நிறுவனங்கள் விதித்துள்ள தடை தெளிவான விதி மீறல் என்று விமான போக்குவரத்து இயக்குநர் ஜெனரல் அருண்குமார் கூறி இருக்கிறார்.
பாஜக ஆதரவாளரான பிரபல ஆங்கில தொலைக்காட்சி நெறியாளர் அர்னாப் கோஸ்வாமியிடம் விமான பயணத்தில் கேள்விகள் கேட்ட நகைச்சுவை நடிகர் குணால் கம்ராவுக்கு விமானத்தில் பயணம் செய்ய ஆறு மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 28ம் தேதி குணால் கம்ரா தனது ட்விட்டரில் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ தான் பெரும் பரபரப்பையும், விவாதத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. லக்னோ விமானத்தில் செல்லும் போது பக்கத்து இருக்கையில் அர்னாப் கோஸ்வாமி அமர்ந்திருந்தார்.
அப்போது கோஸ்வாமியிடம் குணால் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறார். ஆனால், அர்னாப் எந்தக் கேள்விக்கும் பதிலளிக்காமல் மௌனமாக கண்ணாடி போட்டுக் கொண்டு தமது மடியில் வைத்திருக்கும் லாப்டேப்பை நோண்டுவார்.
தொடர்ந்து பேசும் குணால் கம்ரா, நீங்கள் கோழையா.. இல்லை தேசியவாதியா என சரமாரி கேள்வி எழுப்புகிறார். இதை ரோஹித் வெமுலாவிற்காகச் செய்கிறேன். ரோஹித் எழுதிய 10 பக்க தற்கொலைக் கடிதத்தை வாசிக்க நேரம் தேடுங்கள். உங்களுக்கு கொஞ்சமாவது இதயம் இருந்தால் செய்யுங்கள் என்று வெளுக்கிறார்.
அவரின் இந்த வீடியோ வைரலான அதே நேரத்தில் கடும் விமர்சனங்களையும் எதிர்கொண்டது. ஆனால் இந்த தடை விதிமீறலாகும் என்று விமான போக்குவரத்து இயக்குநர் ஜெனரல் அருண்குமார் கூறி இருக்கிறார்.
அவர் மேலும் கூறி இருப்பதாவது: இதுபோன்ற மோதலுக்கு ஏதேனும் விமான நிறுவனங்கள் முதலில் சம்பந்தப்பட்ட பயணிக்கு 30 நாட்கள் தற்காலிக தடை விதிக்க வேண்டும். ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான உள் விசாரணையை நடத்த வேண்டும்.
வாய் தகராறுக்கான தடை மூன்று மாதங்களுக்கு மேல் இருக்கக்கூடாது என்றார். கம்ராவுக்கு பிற விமான நிறுவனங்கள் விதித்த தடை குறித்து கேட்டபோது, விமானத்தில் பயணிப்பவர்கள் அளிக்கும் புகார்களின் தன்மையை பொறுத்தது.
6 மாதங்களுக்கு பயணிகளை பறக்காதவர்கள் பட்டியலில் சேர்க்கும் முன் விசாரணை முடிவடையும் வரை விமான நிறுவனம் காத்திருக்க வேண்டும் என்றார்.
தடை பற்றி கூறிய கம்ரா, இந்த நடவடிக்கையால் தான் அதிர்ச்சி அடையவில்லை. எது பேச்சுரிமைக்கான உரிமையை மட்டுமே பயன்படுத்தினேன்.
எந்த நேரத்திலும் நான் இடையூறு விளைவிக்கவில்லை, எந்த நேரத்திலும் நான் கேபினில் உள்ள குழுவினரின் அல்லது கேப்டனின் உத்தரவுகளை பின்பற்றாமல் இல்லை. யாருக்கும் நான் தொந்தரவு தரவில்லை. நான் செய்த ஒரே காரியம் பத்திரிகையாளரின் ஈகோ தூண்டிவிட்டது என்று தெரிவித்துள்ளார்.
2017ம் ஆண்டு செப்டம்பர் 8ல் பயணிகளின் இடையூறுகளை சமாளிக்க, திருத்தப்பட்ட விதிகளை அரசு வெளியிட்டது. ஊடகங்களில் உரையாற்றிய போது, அப்போதைய மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் பி.அஷோக் கஜபதி ராஜு, இந்தியாவில் விமானங்களில் பறக்க தடை விதிக்கப்பட்டவர்கள் பட்டியல் தனித்துவமானது என்றார்.
அவர் மேலும் கூறியதாவது: அக்கறையின் அடிப்படையிலும், பயணிகள், பணியாளர்கள் மற்றும் விமானங்களின் பாதுகாப்புக்காகவும் இவ்வாறு செய்யப்படுகிறது. பல விதிகள் விமான போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு உகந்த வகையில் திருத்தப்பட்டன என்றார்.