சென்னை

சுற்றுலாத்துறையுடன் இணைந்து கொரோனா தொற்று முழுவதுமாக முடிவடைந்ததும் பக்தி சுற்றுலா திட்டம் செயல்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள பரத்வாஜேஸ்வரர் கோவிலில் ஒரு நிகழ்வில் கலந்து கொண்டார்.  அங்கு அவர்  கண்காணிப்புக் காமராக்கள் பொருத்தப்பட்ட, உலோக திருமேனி பாதுகாப்பு அறையை திறந்து வைத்தார்.  இந்நிகழ்ச்சி முடிவில் அமைச்சர் சேகர்பாபுவை செய்தியாளர்கள் சந்தித்தனர்.

அப்போது அவர், “இதைப்போல் மாநிலம் முழுவதும் உள்ள கோவில்களில், உலோகத் திருமேனிகளைப் பாதுகாக்க 3,085 அறைகள்விரைவில் கட்டப்படும். திருக்கோவிலைச் சுற்றி உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றுவதற்கு முதல்வருடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்  பராமரிப்பில்லாத திருக்கோவில்களைக் கண்டறிந்து அதை மேம்படுத்தும் பணியை மாநில அரசு மேற்கொள்ள உள்ளது.

சுற்றுலாத்துறையுடன் இணைந்து கொரோனா தொற்று முழுவதும் முடிவுக்கு வந்தபின் ‛பக்தி சுற்றுலா திட்டம்’ செயல்படுத்தப்படும்.திருக்கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். தவிரச் சிதம்பரம் நடராசர் கோயிலில் பக்தர்களிடம் தீட்சிதர்கள் கடுமையாக நடந்துகொள்வது தொடர்பாகக் கோயில் நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.