சென்னை: தமிழக சட்டபேரவையில் , இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அறிவிக்கப்பட்ட, அறநிலையத் துறை சார்பில் கோவில்களில் மூன்று வேளை உணவு வழங்கப்படும் என்ற அறிவிப்பு பொதுமக்கள் மற்றும் பக்தர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழக சட்டப்பேரவையின் செப்டம்பர் 4ந்தேதி நடைபெற்ற அறநிலையத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்களைத் தொடர்ந்து, அமைச்சர் பி.கே.சேகர்பாபு, துறை சார்ந்த புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது, மொட்டை இலவசம், 3வேளை உணவு, அறநிலையத்துறை சார்பில் 10 கல்லூரிகள் உள்பட 112 அறிவிப்புகளை வெளியிட்டார்.
தமிழகஅரசின் இந்த அறிவிப்புகளுக்கு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், கோவில்களில் மூன்று வேளை இலவச உணவு வழங்கும் திட்டம் பக்தர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அதன்படி, பழநி மற்றும் திருவரங்கம் திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டமானது விரிவுபடுத்தப்பட்டு செப்டம்பர் 17-ஆம் நாள் முதல் திருத்தணிகை, சமயபுரம், திருச்செந்தூர் ஆகிய மூன்று திருக்கோயில்களிலும் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த திட்டத்தின்படி காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது. இதனால் பக்தர்கள் மட்டுமின்றி ஆதரவற்றோர்களும் பயன்பெறுவார்கள். அதேபோல் பழனி, ஸ்ரீரங்கம் கோவில்களில் பிரசாதம் வழங்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு அறநிலையத்துறையின் அறிவிப்பு பக்தர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. விரைவில் அனைத்து கோவில்களும் முழுமையாக திறக்கப்பட வேண்டும் என்று தமிழகஅரசுக்கு பக்தகோடிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.