லண்டனில் உள்ள இஸ்கான் கோயில் (ஸ்ரீ கிருஷ்ணா கோயில்) கோவிந்தா உணவகத்தில் ஒரு நபர் கோழிக்கறி சாப்பிட்டு பக்தர்களின் உணர்வுகளைப் புண்படுத்திய சம்பவம் நடந்துள்ளது.
இந்தச் செயலைச் செய்தவர் ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் குடிமகனான சான்சோ என்று கூறப்படுகிறது. இது தொடர்பான காணொளி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

கோவிந்தா உணவகத்திற்குள் நுழைந்த அந்த இளைஞன், அங்கிருந்த ஊழியர்களிடம், “இங்கே இறைச்சி கிடைக்குமா?” என்று கேட்டார். “எனக்கு இறைச்சி வேண்டும்” என்று கேட்டார். இதற்கு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து, இங்கு சைவ உணவு மட்டுமே வழங்கப்படுவதாகக் கூறினர்.
உடனே அந்த இளைஞன் பையில் தான் கொண்டு வந்த KFC சிக்கனைத் திறந்து அங்கேயே சாப்பிட ஆரம்பித்தான். இதனால் அங்கிருந்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும், இங்கே அசைவ உணவுக்கு அனுமதியில்லை என்று கூறி அவரை உணவகத்தை விட்டு வெளியேறும்படிக் கூறினர்.
ஆனால் அந்த இளைஞன் அங்கு இருந்தவர்களிடம் கோழி வேணுமா? நீங்க கோழி சாப்பிடுவீங்களா? என்று கேட்டார். அங்கிருந்தவர்களில் சிலர் அந்த இளைஞனின் நடத்தைக்கு கடுமையான ஆட்சேபனை தெரிவித்தனர்.
பின்னர் அந்த இளைஞர் அங்கிருந்து வெளியேறிய நிலையில் உணவக ஊழியர்கள் இதுகுறித்து உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இருந்தபோதும் அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலான நிலையில் உணவு கலாச்சாரத்தை மதிக்காமல் மற்றவர்களின் உணர்வுகளைப் புண்படுத்துவது சரியா? என்று விமர்சிக்கப்பட்டு வருகிறது.