திருவண்ணாமலை: தீபத்திருவிழா கட்டுப்பாடுகளுடன் நடைபெறும் அண்ணாமலையார் கோயிலில் மகா தீபத்தன்று பக்தர்களுக்கு அனுமதி யில்லை என்று அறிவித்துள்ளதுடன், தேரோட்டம், சுவாமி மாட வீதி உலா ரத்து செய்யப்படுவதாகவும் மாவட்ட கலெக்டர் அறிவித்து உள்ளார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா 10 நாட்கள் நடைபெறுவதுண்டு, இந்த ஆண்டு தீபத்திருவிழாவை முன்னிட்டு வரும் 10ம் தேதி அண்ணாமலையார் கோவிலில் கொடியேற்றப்படுகிறது. தொடர்ந்து 10 நாட்கள் விழா நடைபெற உள்ளது. விழாவின் நிறைவாக, 19ம் தேதி அதிகாலை கோயிலில் பரணி தீபமும், அன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரமுள்ள மலை மீது மகா தீபமும் ஏற்றப்படும்.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் அதிகாரிகள் கலந்துகொண்ட ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு கலெக்டர் பா.முருகேஷ் தலைமையேற்றார். கூட்டத்தில், கூடுதல் கலெக்டர் மு.பிரதாப், கோயில் இணை ஆணையர் கே.பி.அசோக்குமார், மாவட்ட வன அலுவலர் அருண்லால், நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக பல கட்டுப்பாடுகள் விதிப்பது மற்றும் பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இதையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து செய்தியளார்களிடம் பேசிய மாவட்ட கலெக்டர் பா.முருகேஷ், ஆன்மிக பக்தர்களின் உணர்வுகள் பாதிக்காதபடியும், ஊரடங்கு கட்டுப்பாடுகளை பின்பற்றியும் கார்த்திகை தீபத்திருவிழா நடத்த திட்டமிடப்பட்டு இருப்பதாகவும், பக்தர்கள் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுவதாகவும் கூறியவர் தினசரி காலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை, தினசரி 10ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும், வரும் 7ம் தேதி முதல் 17ம் தேதி வரையிலும், 20ம் தேதி முதல் 23ம் தேதி வரையிலும் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
வரும் 18ம் தேதியும், பரணி தீபம் மற்றும் மகா தீபம் ஏற்றப்படும் 19ம் தேதியும், அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதியில்லை. மேலும் பக்தர்கள் மலைக்கு செல்லவும் அனுமதியில்லை.
அதேபோல், மாட வீதியில் தினமும் நடைபெறும் சுவாமி வீதி உலா, வெள்ளித் தேரோட்டம், தேர் திருவிழா இந்த ஆண்டும் நடைபெறாது. அதற்கு மாற்றாக, திருக்கோயில் 5ம் பிரகாரத்தில் சுவாமி வீதி உலா நடைபெறும். மேலும், மகா தீபத்தன்றும், பவுர்ணமியன்றும் கிரிவலம் செல்லவும் தடை விதிக்கப்படுகிறது.
சுவாமி பல்லக்கு தூக்குவோர், கோயில் பணியாளர்கள், சிவாச்சாரியார்கள் ஆகியோருக்கு அடையாள அட்டை வழங்கி, கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
பக்தர்கள் கோவிலின் இணையதளத்தில் கட்டணமில்லா முன்பதிவு செய்து இ-பாஸ் பெறும் வசதி ஏற்படுத்தப்படும். இந்த இணையதளம் வரும் 6ம் தேதி முதல் செயல்படும். ஆதார் எண், முகவரி, தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான ஆதாரம் ஆகியவற்றை பதிவேற்றி, இ-பாஸ் பெறலாம்.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு 30 சதவீதமும், வெளி மாவட்டத்தினருக்கு 70 சதவீதமும் இ-பாஸ் வழங்கப்படும். விழா நிகழ்வுகள் முழுவதும் கோயில் இணையதளம் மற்றும் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு மூலம் விழாவை பக்தர்கள் தரிசனம் செய்யலாம். மேலும், வழக்கமான ஆன்மிக மரபுபடி மலைமீது மகா தீபம் ஏற்றப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.