சென்னை: சிதம்பரம் கோயிலில் கனகசபை எனப்படும் சிற்றம்பல மேடை மீதேறி பக்தர்கள் வழிபட அனுமதி அளித்து தமிழகஅரசு உத்தர விட்டு உள்ளது. இதற்கு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. பல இடங்களில் தமிழகஅரசின் உத்தரவை பட்டாசு வெடித்து பக்தர்கள் கொண்டாடினர்.
கொரோனா பெருந்தொற்று காரணமாக சிதம்பரம் நடராஜர் கோயிலில் இருக்கும் கனகசபை எனும் சிற்றம்பல மேடைக்கு பக்தர்கள் செல்வதற்கு கடந்த இரு ஆண்டுகளாக தடை இருந்து வந்தது. பின்னர் அனைத்து கட்டுப்பாடுகளும் வாபஸ் பெறப்பட்ட நிலையில், கனகசபை மண்டபத்தின் மீதேறி பக்தர்கள் தரிசனம் செய்ய கோவிலை நிர்வகிக்கும் தீட்சிதர்கள் தடையை தொடர்ந்து வந்தனர்.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தடை செய்யப்பட்ட சிற்றம்பல மேடையில் ஏற முயன்ற பெண் ஒருவர் கோயில் நிர்வாகத்தால் தடுத்து நிறுத்தப்பட்டார். இது சர்ச்சையானது. அந்த பெண் தன்னை சாதி ரீதியிலாக தீட்சிதர்கள் அவமானப்படுத்தியதாக புகார் அளித்தார். இதன்பேரில், சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் 20 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவும் செய்தனர். இது நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், கனகசபை மீது ஏறி வழிபடும் நடைமுறை தொன்று தொட்டு வழக்கத்தில் இருந்து வருகிறது எனக் கூறிய இந்து சமய அறநிலையத்துறை, பக்தர்களின் கோரிக்கையை ஏற்று நடராஜரான சபாநாயகரை தரிசிக்க அனுமதி அளித்துள்ளது. தமிழகஅரசின் உத்தரவுக்கு பக்தர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. அந்த பகுதியைச் சேர்ந்த பல அமைப்புகள் பட்டாசு வெடித்து கொண்டாடி உள்ளனர். தீட்சிதர்களிடையே மற்றொரு தரப்பினர் பக்தர்களுக்கு சாக்லெட் வழங்கி மகிழ்ந்தனர்.