திண்டுக்கல்: பழனியில் தங்கும் விடுதியில் நாளை முதல் பக்தர்கள் தங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் அதிக பக்தர்கள் வரும் கோயில்களில் முதன்மையானது பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில். பக்தர்கள் தங்குவதற்காக கோயில் நிர்வாகம் சார்பில் தண்டபாணி நிலையம், சின்னக்குமாரர் விடுதி, இடும்பன் குடில்கள், வேலவன் விடுதி உள்ளிட்ட இடங்களில் தங்கும் விடுதிகள் உள்ளன.

அப்பகுதிகளில் கோயில் நிர்வாகம் சார்பில் 1500க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. பல்வேறு வகையான அறைகள் மிக குறைந்த விலைக்கு கோயில் நிர்வாகத்தால் வாடகைக்கு பக்தர்களுக்கு வழங்கப்படுகின்றன.

இந் நிலையில் கொரோனா தாக்கத்தால் பழனி கோவிலுக்கு சொந்தமான தங்கும் விடுதியில் பக்தர்கள் தங்க தற்காலிகமாக அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. இந் நிலையில் இந்த விடுதிகளில் நாளை முதல் பக்தர்கள் தங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இணைய தளத்தில் அறைகளை முன்பதிவு செய்து கொள்ள பழனி முருகன் கோயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.