தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்து தேவேந்திர குல வேளாளர் (பள்ளர் )இனத்தவரை நீக்கிவிட்டு, மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கருத்து தெரிவித்திருக்கிறார். “தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருப்பதால் இழிவுபடுத்தப்படுகிறோம்” என்பது அவரது வாதமாக இருக்கிறது.
இது குறித்து வாசுகி பாஸ்கர் எழுதியுள்ள முகநூல் பதிவு:
நள்ளிரவு பன்னிரண்டு ஒன்று வரை நடக்கும் விஜய் டிவியின் ஏர்டெல் சூப்பர் சிங்கர் போட்டியில், உங்களை அரை தூக்கத்தில் அமர வைத்து நிகழ்ச்சியின் சுவாரசியத்தை வெறியேற்றி விட்டு, நீங்களும் யாரது வெற்றியாளர், பார்த்து விட்டு தூங்கி விடுவோம் என போட்டியின் இறுதி கட்டத்தில் வெற்றியாளரை அறிவிக்கும் போது, போட்டியில் கலந்து கொண்ட நான்கு contestant களுக்கும் முதல் பரிசு என அறிவித்தால், அந்த முடிவு எப்படி சுவாரசிய மற்றதோ, எப்படி அதன் மூலம் எதிர்கால போட்டியில் TRP யை ஏற்ற முடியாதோ, வெற்றி பெற்றவர்களுக்கும் குதித்து கொண்டாட அந்த முடிவில் எதுவுமில்லையோ, அப்படியானது தான் ஹிந்து சாதி பிரியர்களுக்கும் சாதி.
நமக்கும் மேல் ஒருவர் இருக்கிறார் என்கிற தாழ்மையான தனத்தை எண்ணி வெட்கப்படுவதை விடவும், நமக்கு கீழ் ஒருவர் இருக்கிறார் என்கிற எண்ணம் தான் சாதி பிரியர்களை சாதியை கொண்டாட செய்கிறது. நமக்கும் மேல் ஒருவன் இருந்து விட்டு போகட்டும் என்கிற அளவில் அடிமைத்தனத்தோடு கூடிய ஒரு ஆதிக்க மனோபாவத்தை உருவாக்குகிறது.
ஒண்ணரை வருடத்திற்கு முன் மதுரையில் அமித்ஷா, துக்ளக் குருமூர்த்தி தலைமையில் தலித் மக்களில் ஒரு பிரிவினர் தங்களை தலித் என்று அழைக்க கூடாது, தங்களுக்கு தலித் இட ஒதுக்கீடு வேண்டாம் என்கிற கோரிக்கையோடும், அதை ஆவணம் செய்ய வேண்டும் என்றும் கூட்டம் வைத்தார்கள்.
அதில் துக்ளக் குருமூர்த்தி பேசும் போது “”நானே தேவேந்திரர்களை தாழ்ந்தவர்கள் என்றுதான் நினைத்திருந்தேன். தங்கராஜிடம் பேசியபின்புதான் அவர்கள் சாதி பெருமைகள் தெரிந்தது” என்று பேசினார். அந்த தலித் மக்களை தாழ்ந்தவர் என்று நினைத்தாராம், அப்புறம் தான் அவர்கள் தாழ்ந்தவர்கள் அல்ல, இன பெருமை உள்ளவர்கள் என்று தெரிந்ததாம். அப்போ இங்கே தாழ்ந்தவர் யார்? தாழ்த்தப்பட்டவர்கள் தானே இருக்கிறார்கள்? தாழ்ந்தவர்கள் என்றும் ஒரு பிறப்பு இருக்க முடியுமா? சாதியின் இருப்பை இந்தியா முழுக்க நிறுவ வேண்டும் என்கிற எண்ணத்தில் எல்லா சாதியையும் சமம் என்று போலி சமத்துவம் பேசும் மேடையில் கூட குருமூர்த்தியால், தாழ்ந்தவர்கள் யாருமில்ல என்கிற சமத்துவ கருத்தை ஒரு இரண்டு மணி நேரம் கூட தாக்கு பிடிக்க முடியாமல், “தாழ்ந்தவர்கள் என்று நினைத்தேன்” என்கிறார்.
அமித்ஷா, குருமூர்த்தி தலைமையில் எல்லாம் சமூகத்தில் சமத்துவம் பிறக்கும், அவர்கள் எல்லாம் நல்லவர்கள் தான், நீ தான் கெட்டவன், இந்துத்துவ சித்தாந்தம் தூய்மையானது, அவர்களுக்கு hidden ideology எதுவுமில்லை என்று நீங்கள் நினைப்பவர்களானால், நீங்கள் மேற்கொண்டு படிக்க தேவையில்லை, முற்றும், நன்றி.
இந்திய சாதியமைப்பே படிநிலை சாதி அமைப்பு, உங்களுக்கு கீழ் ஒருவன் இருக்கிறான் என்கிற உணர்வை கொடுத்து உங்களை அந்த பெருமிதத்தில் தக்க வைப்பது தான் அதன் ஆதாரமே. இப்படியான அமைப்பில் “நான் தலித் இல்லை, எனக்கு அந்த இட ஒதுக்கீடு வேண்டாம், என்னை BC என்று அழையுங்கள் என்று சொல்லும் போதே, நீங்களும் சாதிய அமைப்பில் அங்கமாகி விடுகிறீர்கள், அதற்கு மேல் இந்த சாதி அமைப்பை விமர்சனம் செய்வதற்கு உங்களுக்கு எதுவுமில்லை. நீங்களும் சாதி இந்துக்களாகி விடுகிறீர்கள்.
தலித் மக்கள் ஒரு படி மேல் முன்னேறுவதால் உங்களுக்கு என்ன பிரச்சனை? அவர்கள் முன்னேற வேண்டும் என்று சொல்கிறீர்கள், முன்னேறினால் உங்களுக்கு ஏன் பிடிக்க மாட்டேன் என்கிறது?
இப்படி சிலர் சூசகமாக கேள்வியை வைப்பதின் மூலம், தாழ்த்தப்பட்ட மக்கள் முன்னேற்றத்தை நாம் விரும்பாததை போல ஒரு பொய் பரப்புரையை கட்டவிழித்து விடுகிறார்கள், இவர்கள் யாரென்று பார்த்தால், இன்னொரு சாதி விரும்பிகள், அவ்வளவு தான்.
சமத்துவத்தை பேணும் யாரும் சமூக மக்களின் முன்னேற்றத்தை வேண்டாம் என சொல்ல மாட்டான், ஆனால் அந்த வளர்ச்சி எத்தகையது என்பது தான் முக்கியம். நான் SC இல்லை BC என்கிற போதே, இன்னொருவன் SC யாக இருப்பான் என்கிற உத்திரவாத்தில் தான் நீங்கள் BC யாக துடிக்கிறீர்கள். அப்படி ஒருவேளை எல்லாருமே BC யானால் தலித் ஒடுக்குமுறை ஒழிந்து விடுமா என்று கேட்டால்,
இங்கே தலித் என்பது,
* தலித்துகள் எல்லாருமே ஒருவேளை அத்திப்பட்டி கிராமம் போல மூழ்கி இறந்து விடுகிறார்கள் என்று வைத்து கொள்வோம், அதற்கு அடுத்த நிலையில் இருக்கும் மிகவும் பிறப்படுத்தப்பட்டவர்கள் தான் சாதியமைப்பில் தலித்துகள்
* பிற்படுத்தப்பட்ட மக்களும் இல்லாமல் போனால், அதற்கும் மேல் இருப்பவர்கள் கீழ் சாதிகள்
* இப்படி எல்லா சாதியும் இல்லாமல் போனால், வர்ணசிரமத்தில் முதல் நிலை என்று சொல்லி கொள்ளும் பார்ப்பன சாதிகளின் பிரிவினைகளான ஐயர் ஐயங்கார்கள் தங்களை ஒருவரை மாற்றி ஒருவரை யாரை தலித் ஆக்கலாம் என்கிற வேலையில் இறங்குவார்கள், மோதிக்கொள்வார்கள்.
* இந்தியாவில் பார்ப்பீனியத்துக்கு எதிராக கலக குரல்கள் வந்து, பார்ப்பனிய சாதிகள் ஒன்றாக இருக்க வேண்டுமென்கிற காலத்தின் கட்டாயத்தில் கூட, பார்ப்பனிய சாதிகள் தங்களுக்குள் மோதாமல் இல்லை, இன்று வரையுமே ஐயர்கள் தங்கள் கோவிலுக்குள் வர விரும்பாத ஐயங்கார்கள் உயிர்ப்போடு இருக்கிறார்கள். தங்களுக்கு பொது எதிரி என்று ஒருவன் இல்லாமல் போனால், இன்னும் எப்படி மோதி கொள்வார்கள் என்று நினைத்து பாருங்கள், வரலாற்றில் இது நடக்காமலும் இல்லை.
ஆக ஒருவரின் மேல் ஒருவர் ஆதிக்கம் செலுத்துவது சாதி அமைப்பின் அடி நாதம், இந்த புத்தியை சாதி விரும்பிகளால் விடவே முடியாது, ஆகையால் பெயரை மாற்றி கொள்வதாலோ, நமக்கும் கீழ் ஒருவன் இருப்பான் என்கிற நம்பிக்கையாலோ சமூகத்தில் சமத்துவத்தை நிலை நாட்டலாம் என்பது ஒன்று தவறான பாதை, அல்லது நாம் மட்டும் முன்னேறினால் போதும் என்கிற அக்மார்க் வர்ணாசிரம முறையை நீங்கள் ஏற்று கொண்டீர்கள் என்பதாகிறது.
பின்னே சமத்துவம் என்பது என்னவென்றால்,
சாதியாக இருக்கட்டும், ஆண் பெண் பாலின பேத அடிமைத்தனமாகட்டும், அது எதுவுமே external அல்ல internal , நீங்கள் அடிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள் என்பதை உணரும் வரை உங்களால் அதில் இருந்து யாராலும் விடுவிக்க முடியாது. சமத்துவம் என்பது மனம் குளிர உணர வேண்டியது, அதை யாரும் உங்களுக்கு கொடையாக கொடுக்க முடியாது, நீயும் சமம் என்று யாரவது உங்களை சொல்லி, அதனால் நீங்கள் சந்தோச பட்டு கொள்வீர்களானால், சமத்துவத்துக்கு வேறு தவறான உதாரணம் இருக்க முடியாது. கேள்வி கேட்கிறவர்களை எலும்பு துண்டு போட்டு வாயை மூட வைப்பதை போல தான், கெஞ்சி கேட்பதை போல தான், ஹிந்து மதத்தின் சாதிய அமைப்பில் அங்கீகாரத்திற்கு தேடி ஓடுவது.
நீங்கள் நீந்தி கொண்டிருப்பது சமுத்திரம் இல்லை கொஞ்சம் பெரிய மீன் தொட்டி அவ்வளவு தான். அதன் விளிம்புகளுக்கு போய் முட்டினால் தான் நீங்கள் இருக்கும் இடம் தெரியும், முட்டிக்கொண்டு இருந்தால் ஒருநாள் உடைபடலாம், அது வெளிப்புறத்தில் நிகழ வேண்டிய மாற்றமில்லை, உட்புறத்தில் அகத்தில் நிகழ வேண்டிய மாற்றம். அது கட்டுடைக்கப்பட்டால் இன்னொருவரின் அங்கீகாரத்தை வைத்து நம் நிலையை நாம் கணக்கிட தேவையில்லை.
வகுப்பறையில் கடைசி பெஞ்சில் இருப்பவன் மக்கு என்றும், முன் வரிசையில் இருப்பவன் சாமர்த்திய வாதி என தீர்மானித்து விட்டு, நீங்கள் இருக்கும் வரிசையை மாற்றி விட்டால், வகுப்பறையில் அறிவு, கல்வி கிட்டி விடுமா? எங்கிருந்தாலும் உங்கள் கவனம் தான் உங்கள் அறிவை வளர்க்கும். பின்னால் இருப்பவன் என யாரோ ஒருவன் சொன்னாலும், நீங்கள் வகுப்பை கவனிக்கும் போது உங்கள் சிந்தனையோட்டம் கரும்பலகைக்கு அருகில் தான் இருக்கிறது, முன் வரிசையில் தான் இருக்கிறது. கரும்பலகைக்கு அருகே எழுத்துக்கள் தெள்ளத்தெளிவாக தெரிய கூடிய இடத்தில் அமர்ந்தாலும், வகுப்பை கவனிக்காதவன், சிந்திக்க தெரியாதவன் பின்னால் தான்.
அது போல, நீங்கள் சிந்திக்க கூடிய திறனை வைத்து, சமூகத்தை பற்றிய உங்கள் அபிப்பிராயம் தான், நீங்கள் கேட்கும் கேள்விகளால் தான், தர்க்க ஆற்றல் தான் உங்கள் இடத்தை தீர்மானிக்கும்.